நாட்டிலுள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் படிப்படியாக நேரடி டிக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு?

நாட்டிலுள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் படிப்படியாக நேரடி டிக்கெட் விற்பனையை நிறுத்த  முடிவு?

மத்திய ரயில்வே துறையில் நாடு முழுவதிலுமாக சுமார் 13 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலரும் பணிக்கு வராமல் ஏமாற்றி வரும் நிலை தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக விடுப்பு எடுத்ததுடன் அதற்கான ஊதியங்களையும் பெற்று வந்துள்ளனர். இவர்களை கணக்கு எடுப்பு நடத்தி அடையாளம் காணும்படி மத்திய ரயில் துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல் உத்தரவிட்டிருந்த நிலையில் நாட்டிலுள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் படிப்படியாக நேரடி டிக்கெட் விற்பனையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் 63,577 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொது செயலாளர் மனோகரன், “2006ம் ஆண்டு முதல் ரயில்வே நுழைவாயிலுக்கு வெளியே ஜன் சதான் டிக்கெட் சேவாக்குகளையும், 2008ம் ஆண்டு முதல் நிலையங்களுக்கு உள்ளே தனியார் டிக்கெட் விற்பனை முகவர்களையும் முன்பதிவில்லா டிக்ெகட்டுகளை விற்பனை செய்ய ரயில்வே அனுமதித்தது. இதன்படி தெற்கு ரயில்வேயில் 102 சேவாக்குகளும் 90 முகவர்களும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் வசதிகளுக்கான கமிட்டியின் பரிந்துரையில் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் முதல் நான்கு தரம், புறநகர் மின்சார பிரிவில் முதல் இரண்டு தரம் என மொத்தம் ஆறு தரத்தில் இடம் பெற்றுள்ள நிலையங்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் பட்டியலில் டிக்கெட் கவுன்டர்களை நீக்கிவிட்டது.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள 720 முக்கிய ரயில் நிலையங்களுக்கு விதிப்படி டிக்கெட் கவுன்டர்கள் கட்டாயமில்லை.

இந்த சூழலில் கடந்த 17ம் தேதி வாரிய சேர்மன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், முற்றிலுமாக வெளிநபர்கள் கொண்டு ரயில்வே டிக்கெட் விற்பனை மேற்கொள்ள ஏதுவாக சேவாக்குகள் கமிஷன் ரூ.2 ஆக உயர்த்துவது, முக்கிய ரயில் நிலையங்களில் முகவர்களை அனுமதிப்பது, அவர்களுக்கான கமிஷன் தொகையை கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் ரயில் டிக்கெட் வாங்குபவர்கள், ரூ.2 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இத்திட்டத்தை நிறைவேற்ற ஏதுவாக முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட் கவுன்டர்களை நாடு முழுவதும் இணைத்து வருகிறது.

மேலும் ஊழியர்களை தேவைக்கு ஏற்ப கையாள முன்பதிவு மற்றும் சாதாரண பயணச்சீட்டு வழங்கும் குமாஸ்தாக்கள், டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரையும் ஒரே பிரிவு ஊழியர்களாக மாற்றி வருகிறது. புறநகர் அல்லாத பிரிவில் தரம் 5 மற்றும் 6 பிரிவில் 5,294 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 70 சதவீத நிலையங்களில் முகவர்கள் மூலம் பயணச்சீட்டு விநியோகம் நடை பெற்று வருகிறது. மீதமுள்ள நிலையங்களுக்கான முகவர்களை நிர்வாகம் தேடிவருகிறது. மேலும் 2,326 கிராமப்புற நிலையங்கள் காண்ட்ராக்டர்கள் வசம் உள்ளது. இதுதவிர செல்போன் பயணச்சீட்டுகளை அறிமுகம் செய்து விளம்பரம் செய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக ரயில்வேத்துறை நேரடி டிக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் 63,577 குமாஸ்தாக்கள் வேலை இழப்பார்கள். இவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் மிகப்பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது அமையும். இதனால் பொதுமக்கள் ரயில் பயணம் மேற்கொள்வதில் தடுமாறுவார்கள். எனவே இந்த திட்டத்தை உடனடியாக அதிகாரிகள் கைவிட வேண்டும்”இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!