மோடி என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? – ராகுல் கேள்வி! – AanthaiReporter.Com

மோடி என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? – ராகுல் கேள்வி!

நடக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் 5 முறைக்கு மேலாக போட்டியிட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த முறையும் அங்கேயே போட்டியிடுகிறார். அதற்காக ரேபரேலி தொகுதியில் இன்று சோனியா காந்தி மனுத்தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,”மோடி ஒன்றும் வெல்லமுடியாதவர் அல்ல. அதை, வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும். வரலாற்றில் பலரும் தாங்கள் வெல்லமுடியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் தோற்றுப்போன சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு மோடி என்ன செய்துள்ளார். ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் நான் சவால் விடுகிறேன். ரபேல் விவகாரத்தில் நான் மோடியிடம் நேருக்கு நேர் வாதிட தயாராக இருக்கிறேன். இந்த வாதத்திற்கு பிறகு, மோடியால் மற்றவர்களின் கண்களை பார்த்து பேச முடியாத நிலைக்குத் தள்ளுப்படுவார் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். நான் இவ்வாறு பேசுவதால், எனக்கு எதிராகப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் தலைவர்களை சிறையில் தள்ளுவேன் என்று மோடி மிரட்டல் விடுத்துள்ளதற்கெல்லாம் நான் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை.

ரபேல் விவகாரத்தில் சீராய்வு மனுக்களுடன் தாக்கலான ஆதாரங்களை ஆய்வுக்கு எடுக்கலாம், விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஏன் ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.