ராகுல் காந்தி மோடி மீது குற்றச்சாட்டு

ராகுல் காந்தி மோடி மீது குற்றச்சாட்டு

உயர் விளைச்சல் ரக நெல் வகைகளை உருவாக்கிய வேளாண் விஞ்ஞானி தாதாஜி ராம்ஜி கோபர்கடே இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

கோபர்கடே சென்ற வாரம் நான்டெட் என்ற கிராமத்தில் காலமானார். அவரது வீட்டுக்கு சென்று கோபர்கடே மறைவு குறித்து துக்கம் விசாரித்தார் ராகுல். நான்டெட் கிராமத்தில் விவசாயிகள் கூட்டம் ஒன்றிலும் ராகுல் காந்தி பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக குறை கூறினார்.

விவசாயிகளுக்கான சந்தை பற்றி விரிவாக பேசப்படுகிறது. ஆனால் நமது பிரதமர் மோடியின் முழு மார்க்கெட் நடவடிக்கைகள் 15 முதல் 20 பேர்களுக்கானவை. அதனால் மோடிக்கு மாற்றாக கிடைப்பது என்ன? பணக்காரர்களின் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் மோடிக்காக நாடு முழுக்க வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுகிறார்கள்.

காங்கிரஸ் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த போது கர்நாடகம், பஞ்சாப் மாநில விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசின் பிரதமரோ மாநில அரசின் முதல்வரோ ஏராளமாக உதவ முடியும். ஆனால் அவர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. தெளிவான மனதில்லை. அதனால் அவர்கள் உங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

நான் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என்று கூறவில்லை. உங்களுக்கு உதவி செய்வதற்கு நான் முழு மனதோடு முயற்சி செய்வேன் என விவசாயிகளிடம் நேரடியாக ராகுல் கூறினார்.

மிகவும் கடுமையாக பாடுபடுகிறவர்களுக்கு இந்த அரசிடம் இருந்து அங்கீகாரம் கிடைப்பதில்லை. விருதுகள் வேண்டுமானால் வழங்கப்படலாம். நம்முடைய வேளாண் விஞ்ஞானி கோபர்கடே தன்னுடைய திறமையால் ஏராளமான விவசாயிகளுக்கு உதவி இருக்க முடியும். மோடி அரசு என்ன செய்தது. 15 பணக்காரர்களின் கடனை ரத்து செய்தது. இங்கு கூடியுள்ள நீங்கள் சொல்லுங்கள். விவசாயிகளில் எத்தனை பேருடைய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி செய்த போது ரூ.70 ஆயிரம் கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டன.

பிரதமர் மோடி தந்த ரூ.35 ஆயிரம் கோடியோடு நிரவ் மோடி வெளிநாட்டுக்கு ஓடி போய் விட்டார். எத்தனை வேலை வாய்ப்புகளை அவர் உருவாக்கினார்? ரூ.5 கோடி நீங்கள் கோபர்கடே கையில் கொடுத்திருந்தால் அவர் 5 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பார்.

நமக்கு நாடு முழுக்க கோபர்கடே போன்ற திறமையுள்ள அறிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசு பணக்காரர்களுக்கு மட்டுமே கடன் தருகிறது. கடன் வாங்கியவர்களிடம் வேலை வாய்ப்பு பற்றி கேளுங்கள். அது பற்றி பிரதமர் பேச மாட்டார்.

அடுத்த தேர்தல் 2019-ல் அதில் உங்கள் உதவியால் ஆட்சி மாற்றம் நடைபெறும். அதுவரை நீங்கள் பக்கோடா சுட்டு வியாபாரம் செய்யலாம்.

மோடி அரசு பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தி விட்டது. அரசு தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நான் உங்களுக்கு பொய் வாக்குறுதி தர மாட்டேன். உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று வாக்குறுதி வழங்க மாட்டேன்.

ஆனால் அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. அவர்கள் விவசாயிகளின் கடனை ரத்து செய்யலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வோம். நம்முடைய மண்ணில் விளைந்த அறிஞர்களுக்கு உதவி செய்வோம். அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால் பிரதமர் மோடி அதை செய்யவில்லை என்று ராகுல் குற்றம் சாட்டினார்.

error: Content is protected !!