ஐ.நா.சபையில் எம்.எஸ் ஸூக்கு இசையாஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான் ! – AanthaiReporter.Com

ஐ.நா.சபையில் எம்.எஸ் ஸூக்கு இசையாஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான் !

நம் பாரத தேசத்தின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100வது பிறந்த நாள் விழா, அவர் 1966ல் ஐ.நா., சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியதன் 50வது ஆண்டு விழா மற்றும் இந்திய சுதந்திர தினத்தின் 70வது ஆண்டு விழா ஆகிய மூன்றும் இணைந்து கொண்டாடப்பட்டது.

ar rahman aug 16

சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் உதவியுடன் நடந்த இந்த விழாவில்  எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் பாடல்களுடன் ‘வந்தே மாதரம்’ பாடலையும், ரகுமான் பாடினார். முன்னதாக் ஏ.ஆர். ரகுமான் கச்சேரிக்காக மேடை ஏறியபோது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்திய – அமெரிக்கர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அவ்விழாவில் பேசிய ரஹ்மான், ”நான் பிறப்பதற்கு முன்பே, இந்த இடத்தில், எம்.எஸ்.சுப்பு லட்சமி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இசை கலைஞர்களுக்கு எல்லாம், அவர் முன் மாதிரியாக இருந்தவர்,” என்றார்.

இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தனது இசைக்குழுவினருடன் கச்சேரி நடத்திய அவர் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தனது ‘ஜெய் ஹோ‘ பாடல், சுபி பாடல்கள் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களுக்கு இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார்.