மோசடி செஞ்சவங்க லிஸ்டை அனுப்பியும் கண்டுக்காத கவர்மெண்ட்! – ரகுராம் ராஜன் காட்டம்! – AanthaiReporter.Com

மோசடி செஞ்சவங்க லிஸ்டை அனுப்பியும் கண்டுக்காத கவர்மெண்ட்! – ரகுராம் ராஜன் காட்டம்!

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார் நிதி ஆயோக் துணை-தலைவர் ராஜிவ் குமார். அதே நேரம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் எனவும் அவர் சுட்டிக் காட்டி இருந்த நிலையில் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற குழுவுக்கு ரகுராம் ராஜன் அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில்,”நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது முறைகேடுகளை கண்காணிக்க தனி மையம் அமைக்கப்பட்டது. அதிக முறைகேட்டில் ஈடுபட்டோர் அடங்கிய பட்டியல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் இதன் மீது எவ்வித முன் நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இந்த பிரச்னையை தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். அதிக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். 2016ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்றார். வங்கிகளின் வராக்கடன் 4 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. முன்னரே சொன்னது போல் ரகுராம் ராஜனின் நடவடிக்கைகளே காரணம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ்குமார் குற்றம் சாட்டி இருந்தார். இதனிடையே இதற்கான காரணங்களை கேட்டு ரகுராம்ராஜனுக்கு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழு விளக்கம் கோரி இருந்தது. இதற்கு ரகுராம் ராஜன் 17 பக்க விளக்க அறிக்கை அனுப்பி உள்ளார்.

அவர் அதில் ”வங்கிகளின் வராக் கடன் அதிகரிப்பு என்பது , 2006–2008 ம் ஆண்டு காலக்கட்டத்தில் துவங்கி விட்டது. அப்போது பொருளாதார வளர்ச்சி பலமாக இருந்தது. . 2006ம் ஆண்டு வரை நல்ல லாபத்துடன் இயங்கி வந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏராளமான கடனை வாரி வழங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடன் வசூல் செய்ய முடியாத சூழ்நிலைக்கு சென்றன. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதில் வங்கிகள் மெத்தனமாக செயல்பட்டன. இதற்கு வங்கி உயர் அதிகாரிகளின் தகுதியின்மையா அல்லது ஊழல் போக்கு காரணமா என்பதை என்னால் கூற இயலவில்லை. வசூல் செய்யமுடியாத கடன்களை வராக் கடனாக தான் அறிவிக்க வேண்டும். ஆனால், கடன் பெற்றவர்களுக்கு காலஅவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டின.

மன்மோகன் சிங் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன. விசாரணை பயத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு் சந்தேகம் போன்ற பிரச்னைகளால் மத்தியில் ஆண்ட அரசுகள் முடிவுகள் எடுப்பதில் தாமதித்தன. ஐ.மு. கூட்டணி மற்றும் தே.ஜ.கூட்டணி ஆட்சிகள் தாமத முடிவுகளே எடுத்தனர்.

அதிகளவு வங்கிகளில் மோசடி செய்தவர்கள் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி நடவடிக்கைக்காக அனுமதி கோரி இருந்தோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. குற்றவாளிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு புறம் வராக்கடன் அதிகரிப்பு பிரச்னை இருக்க, மறுபுறம் ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது.

இதனால் செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாபமும் குறைந்தது; கடன் வசூலும் பாதிக்கப்பட்டது. வராக் கடன் பிரச்னையை சமாளிக்க எனது தலைமையிலான ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், வங்கிகள் பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்த போதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கி இல்லாத காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் செயல்படமுடியவில்லை. அதே நேரத்தில், வங்கிகளின் உயர் குழுக்களில் இடம் பெற்று இருந்த ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளும் சரியாக செயல்படவில்லை.

வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்புக்கு ரிசர்வ் வங்கியை பழி சுமத்த முடியாது. ரிசர்வ் வங்கியை பொறுத்த மட்டில் ஆட்டக்காரர் அல்ல. ஒரு நடுவர் தான். வங்கியாளர்கள், புரமோட்டர்கள் அல்லது அரசில் உள்ள ஆதரவாளர்கள் தான் வராக்கடன்பிரச்னைக்கு பழி சுமத்துவார்கள். உண்மையில் வங்கியாளர்கள், புரமோட்டர்கள் மற்றும் சூழ்நிலைகள் தான்வராக்கடன் பிரச்னைக்கே காரணம். வங்கியாளர் எடுக்கிற வணிக முடிவுகளுக்கு எல்லாம் ரிசர்வ் வங்கி மாற்றாக முடியாது.

வங்கிகளின் சொத்து தரத்தை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், விசாரணைக்கு வங்கிகள் பயந்தன. இது கடன் வழங்குவதிலும், கடன் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடன் வசூல் தீர்ப்பாயங்களும் மெதுவாக செயல்பட்டன. ஒரு கடனை வசூல் செய்ய, நான்கு ஆண்டுகள் வரை காலம் எடுத்து கொண்டன”என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.