ஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்!

ஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்!

சொகுசு வசதி சர்ச்சை எதிரொலியாக சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு வகுப்பில் வைக்கப்பட்டிருந்த 20 தொலைக்காட்சி பெட்டிகளை போலீசார் அகற்றியுள்ளனர்.

சென்னை புழல்சிறையில் பஞ்சுமெத்தை, பட்டுத்துணியில் புரண்டு சிறைக் கைதிகள் ஷாட்ஸ், டீ ஷர்ட், கூலிங்கிளாஸ் அணிந்தபடி ஜாலியாக வலம் வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளி யாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைக்கைதியிடம் சிக்கிய செல்போனில் இருந்த இந்த காட்சிகள் குறித்து சிறைத்துறை நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறை என்பது குற்றவாளிகளை சீர்திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அந்த சிறைச்சாலைகள் சீர்கெட்டு தற்போது உல்லாச விடுதிகளாக மாறி வருகிறது என்பதே உண்மை. கரன்சிக்கு ஆசைப்பட்டு கைதிகளுக்கு சிறைத்துறை காவலர்களே செல்போன், ஓட்டல் சாப்பாடு, கஞ்சா என அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. என்னதான் சிறைத்துறை உயரதிகாரிகள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாலும் சிறைகளில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க முடிவதில்லை. தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளம், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட் களின் புழக்கமும் ஏராளம் என்ற குற்றச்சாட்டை முழுமையாக களைய முடிவ தில்லை. செல் போன், கஞ்சா, ஓட்டல் உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்காக லஞ்சம், ஜாமினில் வெளியில் செல்வதற்கும் லஞ்சம் என சிறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.

மேலும் போதைப்பொருட்கள், செல்போன்கள் போன்றவற்றை சிறையில் உள்ள கைதியிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தனித்தனி கட்டணங்கள் லஞ்சமாக வசூலிக்கப்படுகின்றன. கடந்த மாதம் இவற்றை மோப்பம் பிடித்த சிறைத்துறை விஜிலென்ஸ் அது குறித்து விரிவாக அரசுக்கு நோட் அனுப்பியது. இந்த தகவல் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு செல்லவே அந்த அதிகாரிகள் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பினர். சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புழல் சிறையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கைதிகள் எப்படியெல்லாம் உல்லாசமாக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற அதிர்ச்சித்தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அந்த செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.

புழல் சிறைக் கைதிகள் தங்கும் அறை மசாஜ் விடுதிகள் போன்று பல வர்ணங்களில் பெயிண்ட் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வண்ணமயமான பட்டு திரைச்சீலைகள் அறை ஜன்னல்களில் தொங்க விடப்பட்டு உள்ளன. இன்னொரு விசேஷம் என்னவென்றால் சிறை அறைகளுக்குள் விலை உயர்ந்த மரத்தால் ஆன சொகுசு கட்டில்கள் போடப்பட்டு, அதில் பஞ்சு மெத்தையும் பட்டுத்துணியால் ஆன விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன. மற்றொரு புகைப்படத்தில் அரைக்கால் சட்டை மற்றும் ஸ்டைலாக டீ ஷர்ட், ஷூ, கூலிங்கிளாஸ் சகிதம் கைதிகள் டூரிஸ்ட்டுக்கள் போல உல்லாச உடை அணிந்தபடியும், செல்பி எடுப்பது போலவும் பந்தாவாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு போட்டோவில் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்துள்ளார், இன்னொரு கைதி ஜாலியாக நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி, இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார்.

இந்த புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் மூலம் நேற்று வைரலாக பரவின. இதனையடுத்து சிறைத்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா நேற்று புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறையில் உள்ள ரவுடிகள் அங்கிருந்தே கொலைக்கு சதி திட்டம் தீட்டிய தகவல்களும் அம்பலமாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ஜெயிலில் ரவுடி ஸ்ரீதரின் வலது கரமான தினேஷ் என்ற ரவுடி தனது எதிரியை தீர்த்துக்கட்ட செல்போன் மூலம் தனது கூலிப்படையினருக்கு உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது. கைதியின் செல்லில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்த அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் பிரபல அரசியல் விஐபி ஒருவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிறைத்துறை அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயவுள்ளது என சிறைத்துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

error: Content is protected !!