ரஷ்ய அதிபருக்கான தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி!

ரஷ்ய அதிபருக்கான தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக  வெற்றி!

ரஷிய அதிபர் தேர்தலில் 76.67 சதவீத வாக்குகளைப் பெற்ற, தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் மேலும் 6 ஆண்டு காலம் தொடர்ந்து அவர் அதிபர் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவின் அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (18ஆம் தேதி) நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் களம் கண்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷிய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷிய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்காக ரஷியாவில் 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் ஆர்வமாக, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. எண்ணப்பட்ட 99.8 சதவீத வாக்குகளில், 76.67 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புதின் அமோக வெற்றிபெற்றார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக ரஷியாவில் அதிகாரத்தில் இருந்து வரும் புதினின் ஆட்சி மேலும் நீடிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய புதின்,“கடந்த சில ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் இது. மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் நான் பார்க்கிறேன்” என்று புதின் கூறினார்.

புதினுக்கு அடுத்த இடத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார். 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.

பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் வாழ்த்து

வெற்றிபெற்றுள்ள விளாடிமிர் புதினுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோவுடன் பெய்ஜிங் ஒன்றிணைந்து பணியாற்றி, இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்த ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்,”வரலாற்றில், சீனா- ரஷிய கூட்டுறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும் இக்கூட்டணி முன் உதாரணமாகத் திகழ்கின்றது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலக அமைதிக்காகவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீன அதிபரைத் தவிர, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, பொலிவியா அதிபர் ஈவோ மொராலஸ் ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்களை புதினுக்கு தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!