ஜெ.-வுக்குப் பதில் சசி! – என்ன நடக்குது? என்னதான் நடக்கும்? – AanthaiReporter.Com

ஜெ.-வுக்குப் பதில் சசி! – என்ன நடக்குது? என்னதான் நடக்கும்?

கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவோம். சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆவதையோ முதலமைச்சர் ஆவதையோ யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அது அவர்களுக்கும் தெரியும். எதிர்கட்சிகளுக்கும் தெரியும். அதனால்தான் தாழி உடைவதற்காக பொறுமையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எடுத்த எடுப்பில் போய் முதலமைச்சர் நாற்காலியை எல்லாம் பறித்துக் கொண்டு வர முடியாது. போயஸ் கார்டன் மீது போர்த் தொடுக்கவும் முடியாது. அதேசமயம் தார்மீகப்படி அது சரியா? என்கிற கேள்விகளை வேண்டுமானால் எழுப்பலாம். கடந்த இரண்டு மூன்று நாட்களாக கோடநாடு பக்கமாகத்தான் சுற்றினேன். நிறையக் கோடநாட்டுக் கதைகள் சொல்வதற்கு இருக்கின்றன என்றாலும், அவையெல்லாம் பேசுவது முறையாகாது. தவிர இரண்டு மூன்று ஊர்களுக்குச் சென்ற போது மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முயன்ற போது, அது அனைத்தும் சசிகலா அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.

edit dec 30

அதிலும் எம்.எல்.ஏக்களை, அமைச்சர்களைக் காலில் விழ வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. “ஜெயலலிதா காலில் விழுந்தார்கள் என்றால், அந்தம்மா சாதித்தவர். போராடி வென்றவர். தவிர பிறப்பால் அவர் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்கிற அடியாழத்து அடிமைத்தனம் இருந்தது. அந்த அடிமைத்தனம் அதை ஆதரிக்கிற போக்கு மக்கள் மனதிலும் இருக்கிறது. ஆனால் சசிகலா அப்படியா?” எனக் கேள்வி எழுப்பினார்கள். அது சரியா தவறா என்கிற வாதங்களுக்குள் நான் செல்லவில்லை. ஆனால் மக்களின் மனநிலை இந்த விஷயத்தில் அவருக்கு எதிராகவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் சரி. தார்மீகப்படி இந்த விவகாரத்தை எப்படி அவர்கள் கையாளப் போகிறார்கள் என்பதை வைத்தே அவர்களது எதிர்காலத்தைக் கணிக்க முடியும். தவிர இன்னொரு விவகாரமும் இருக்கிறது.

பொதுவாகவே பிராமணர்கள் இறந்தால், புதைப்பதில்லை. எரிப்பார்கள். அவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அதைச் செய்து விடுவார்கள். அது அவர்களின் சடங்கு. அதை மதிக்கவும் வேண்டும். ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் அவர் புதைக்கப்பட்டதிற்கு எந்தவித பெரிய எதிர்ப்புகளும் எழவில்லை. ஒரு தீவிரமான சடங்கை ஜெயலலிதா விஷயத்தில் ஏன் மேற்கொள்ளவில்லை? அல்லது மேற்கொள்ள விடவில்லை? என்பதையும் உற்று நோக்க வேண்டும். ஜெயலலிதா சாவின் மர்மம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி, நானாக இருந்தால் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என்று சொல்லியிருப்பதையும் இதனோடு சேர்ந்து முடிச்சுப் போட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். ஆக உறையில் சொருகப்பட்டிருக்கிற கத்தியைச் சம்பந்தப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுத்து மிரட்டத் துவங்கலாம். இருப்பதிலேயே பெரிய கத்தி இதுதான்.

மத்திய அரசு இப்போதைக்குக் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கியிருக்கிறது. வெளிப்படையான நெருக்கடிகளுக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் குடைச்சல்கள் தொடரும் என்றே தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்து மத்திய அரசு அந்தத் தரப்பிற்கு அனுசரணையாகவே இருந்தது என்பது வெட்டவெளிச்சம். ஆனால் இடையில் காங்கிரஸ் விடு தூதை இந்தத் தரப்பு முன்னெடுத்ததால்தான் மிகையான நெருக்கடிகள் சில நாட்களுக்கு முன்பு வரை தரப்பட்டனவோ என்றும் யோசிக்க இடமிருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் சட்டப்படி அமர்ந்து விடலாம். ஆனால் மக்கள் மனதில் எப்படி இடம் பிடிப்பது என்பதை அவர்கள்தான் சிந்திக்க வேண்டும். இப்போதைக்கு தேர்தல் எதுவும் வரப் போவதில்லை என்பதால் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். கூடவே இதுவரை தங்களது சொந்தங்கள் தலைப்பிரட்டைத் தனமாக மறுபடியும் ஆடிவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் தேவை. அவர்களால் அதைத் தடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே. இப்போதைக்கு சாதகத் தத்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ரம்மி சேரத் துவங்கியிருக்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் டிக் அடிக்க முடியாது இல்லையா? ரம்மி விளையாடுவதற்கு அதிர்ஷ்டத்திற்கு நிகராக திறைமையும் அவசியம்தானே?

சசிகலா முதல்வராக வரும் பட்சத்தில் நிர்வாக ரீதியிலான குளறுபடிகள் எதுவும் பெரியளவிற்கு வராது. ஆட்சியை நடத்திக் கொடுக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் அதுதான் நடந்தது. நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் சொல்கிற இடத்தில் அவர் கையெழுத்துப் போடுவார். கையெழுத்து வாங்குகிற இடத்தில் இருக்கும் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்பதைத் தலைமைச் செயலாளர் விஷயத்தில் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்தானே? அரசியல் ரீதியிலாக இவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு மற்றவர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் என்பதில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

மக்களிடம் எப்படி அவரை முன்னிறுத்தப் போகிறார்கள் என்பதை அறிய எல்லோரிடமும் ஆவல் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே ஜெயலலிதாவை எம் ஜி ஆர் மரணமடைவதற்கு முன்பு கட்சியை விட்டே நீக்க முன்முயற்சிகள் எடுத்தார். அவர் சாவிற்குப் பிறகு அதே ஜெயலலிதா கட்சியின் எல்லாமுமாக ஆகிப் போனார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி கட்சிக்காரர் மத்தியில் ஜெயலலிதாவிற்கு செல்வாக்கு அப்போது இல்லாமல் இருந்த போதும் மக்களிடையே அவருக்கு தன்னியல்பாக செல்வாக்கு இருந்தது. அதனால்தான் அவரால் வீறு கொண்டு எழ முடிந்தது. ஆனால் நிலைமை இப்போது வேறு மாதிரியாக இருக்கிறது. இங்கே பொறுப்பில் இருக்கிற கட்சிக்காரர்களின் சப்போர்ட் இருக்கிறது. ஆனால் மக்கள் சப்போர்ட் இல்லை.

வாய்ப்புக்கள் ஒருவருக்குக் கிடைப்பதைத் தடுக்க முடியாது. அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது அவர்களது கைகளில்தான் இருக்கிறது. ஜெயலலிதா பாணி அரசியலையே அவர்களும் முன்னிறுத்துவார்களானால், மக்களின் அங்கீகாரம் கிடைப்பது கொஞ்சம் சிக்கல்தான். ஏனெனில் இங்கே எப்போதுமே மாமியார் உடைத்தால் பொன்குடம், மருமகள் உடைத்தால் மண்குடம் என்கிற விதி கனகச்சிதமாகப் பின்பற்றப்படுகிறது. ஜெயலலிதா என்கிற பிம்பம்தான் இப்போதைக்கு அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பத்தை உடைக்கத் தயாராகும் பட்சத்தில் பின்னடைவுகள் வரிசை கட்டி வர ஆரம்பித்துவிடும். ஆர்வக் கோளாறில் ப்ளக்ஸ் போர்டில் ஜெயலலிதாவிற்கு நிகராக சசிகலாவை முன்னிறுத்தலாம். ஆனால் மக்கள் மனதில் அப்படி நிறுத்த முடியாது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். காலில் விழ வைப்பதையெல்லாம் உழைப்பு என்றால், ஸாரி மேடம்!

சரவணன் சந்திரன்