ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியின் போது, “வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதி முறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.

ஹெல்மட் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் செல்பவர்களிடமும் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்க மாட்டார்கள். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் 6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.

இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.

பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்று அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!