விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்!

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி  சி-42 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப் பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே விண்ணில் செலுத்தப்படும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் நேற்று இரவு இருளிலும் வெற்றி பயணத்தை தொடர்ந்தது. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோமீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட, 445 கிலோ எடைகொண்ட நோவாசர் செயற்கைகோள் காணாமல் போன கப்பல்களை கண்டுபிடிப்பது மற்றும் பேரிடர் குறித்த கண்காணிப்புக்கும், 444 கிலோ எடைகொண்ட எஸ்1- 4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிக்காகவும் தயாரிக்கப்பட்டவை.

இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இரவு நேரத்தில் ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட திட்டமும் வெற்றியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என தெரிவித்தார்.

மேலும் அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள்களும், 8 ராக்கெட்களும் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் கூறினார். சந்திரயான் 2 செயற்கைகோளை அடுத்தாண்டு ஜனவரி 3 முதல் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த நேரம் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!