தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்! – AanthaiReporter.Com

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்!

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைப்பதை கண்டித்தும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர், இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் நாளை காலை 10 மணிவரை 24 மணிநேரம் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும், இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்பார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத்தலைவர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கும் நடவடிக்கையை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டிக்கிறது, தேசிய மருத்துவஆணையம் தொடர்பான சில ஷரத்துக்கள் நாங்கள் எதிர்க்கிறோம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 50 சதவீத மாணவர் சேர்க்கைக்குரிய கட்டணங்களை அந்தந்த மருத்துவக்கல்லூரிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது ஏழை மாணவர்களுக்கு எதிரானது, நெக்ஸ்ட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவமேல்படிப்பு நிரப்பப்படும் என்ற அறிவிப்பில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை,

சமுதாய மருத்துவ உதவியளிப்பவர் என்ற பெயரால் நவீன மருத்துவ பிரிவை சேர்ந்த அனைவரும் மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்ற மத்திய அரசின் முடிவு போலி மருத்துவர்களை அதிகரிக்க செய்யும் எனவே மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 10 மணிவரை 24 மணிநேர வேலைநிறுத்தத்தை மேற்கொள்வோம்” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத்தலைவர் டாக்டர் கனகசபாபதி அறிவித்துள்ளார்,

ஆனால் இந்த வேலைநிறுத்தத்தில் பிரசவம் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்