அந்தரங்கம் புனிதமானது! – AanthaiReporter.Com

அந்தரங்கம் புனிதமானது!

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதைத் தான் உணர்த்துகிறது. “தனிமனித ரகசியம் காத்தல்” அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறிவிட்டது. இந்திய அரசியல் அமைச்ப்புச்சட்டத்தின் 14, 19, 21 ஆகிய மூன்று பிரிவுகளையும் “தங்க முக்கோணம்” என்று சட்டக்கல்லூரியில் எங்கள் பேராசிரியர்கள் வர்ணிப்பார்கள். அதாவது சமத்துவம், அனைவருக்குமான நீதி, கௌரவமாக வாழ உரிமை ஆகிய மூன்றும் இந்த மூன்று உறுப்புகளின் மூலம் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தரங்கம் பாதுகாக்கப்படாமல் எப்படி கௌரவமாக வாழ முடியும்? எனவே “ப்ரைவசி” நமது அடிப்படை உரிமை என்பது வாதம். அரசியல் சாசனத்தின் முகவுரையில் இது இருப்பதால் மாற்றவியலாதது.ஆனால் கல்வி, மருத்துவம்,உணவு போன்ற விஷயங்களே ஏட்டளவில் உள்ள ஒரு நாட்டில் அந்தரங்கம் மட்டும் எப்படி அடிப்படை உரிமையாக முடியும்? எனவே நீதிபதி சந்திரசூட் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்தார். அவை – திருமணம் போன்ற முதல் ரக தனி மனித ரகசியங்கள், வங்கிக் கணக்கு, வருமானவரி போன்ற இரண்டாம் ரகம், மற்றவை மூன்றாம் ரகம்.

இப்போது தனிமனித ரகசியம் காத்தல் அடிப்படை உரிமை என்று அரசியல் அமைப்புச்சட்ட உறுப்பு 21ன்படி கூறிவிட்டது உச்சநீதிமன்றம். எனவே அதைக் காக்க வேண்டிய பொறுப்பும், அதற்கு ஊறு ஏற்பட்டால் தண்டிக்கவேண்டிய கடமையும் வந்துவிடுகிறது.

இவற்றில் ஆதார் எந்த வகை?

அரசியல் சாசன 9 நீதிபதிகள் அமர்வு அதற்குள் துல்லியமாகப் போகவில்லை. மாறாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் அமர்வு இனி அதை வியாக்யானம் செய்யும்.
மூல வழக்கைத் தொடர்ந்தவர் கர்நாடக மாநிலத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். அவருக்கு வயது 91. ஆதார் தொடர்பான பிற வழக்குகள் அதனுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டன.

தனிமனித ரகசியம் என்பது ஒரு மேலோட்டமான தத்துவம். அதை அடிப்படை உரிமை என்று சொல்ல முடியாது என்று வாதிட்ட மத்திய அரசின் கருத்துகளை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மொத்தத்தில் இன்று வெளியான தீர்ப்பு இந்திய நீதித்துறை சரித்திரத்தில் ஒரு முக்கியமான மைல்கல். உலக நாடுகளே பின்பற்றவேண்டியதும் கூட.

தராசு ஷ்யாம்