சோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை! – AanthaiReporter.Com

சோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 14-ம் தேதிவரை நடக்கிறது. சுமார் ரூ.800 கோடி செலவில் கடந்த 2 மாதங்களாக இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்து இருக்கிறது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களின் ஆயுதங்கள், தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் 9.25 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்று கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பண்டைய காலத்தில் இருந்தே தமிழகம் ராணுவத் திறனுக்குப் புகழ்பெற்றது. குறிப்பாக சேர, சோழ,பாண்டியர்கள் காலத்தில் ஆயுதங்களை உருவாக்குவது தமிழகத்துக்குப் புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஆயுத உருவாக்கத்தில் சிறப்பாக இருந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை இந்தக் கண்காட்சி நிறைவேற்றும்” என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ” இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. தமிழகத்தில் நடைபெறும் முதல் ராணுவக் கண்காட்சி இது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியாவுக்கு இந்தக் கண்காட்சி உதவும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விண்வெளி வளர்ச்சி போன்றவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தின் ஒருபகுதியாக இருந்தவை என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உறுதியேற்றுள்ளோம். தமிழகத்துக்கு உதவிவரும் பிரதமருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது, “நம் ராணுவம் சார்பில் நடக்கும் கண் காட்சியில் நான் பங்கேற்பது இதுவே முதன்முறை. சோழர்கள் ஆட்சி செய்த இந்த இடத்தில் நாம் கூடியிருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இந்த மண் கடற்படை மரபு கொண்ட மண். 500 இந்திய நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதைவிட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு நமது நாடாகும். ஐநாவின் அமைதிப் படையில் இந்திய வீரர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சிறிய அளவில் தொடங்கிய ராணுவத் தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது நமக்குப் பெருமை. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சியடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, பாதுகாப்பு துறையில் ஆயுதக் கொள்முதல் நடைமுறையில் பல குறிப்பிட்ட விதிகளில் மத்தியில் ஆளும்பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பாதுகாப்பு துறையில் 118 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி தரப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3642 கோடியாகும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 794 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி அளித்துள்ளோம். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8500 கோடியாகும்.

கடந்த கால ஆட்சியில், முறையான கொள்கைகள் வகுக்கப்படாத காரணத்தால், பாதுகாப்பு துறையில் முக்கிய சிக்கல்கள் இருந்தன. இதுபோன்ற காலதாமதம்,சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திறமையின்மை, பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதை கண்டறிந்தோம். இவை நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்தோம். அதுபோன்ற குறைகள் இருக்க இப்போது, எதுவும் இல்லை, மீண்டும் ஒருபோதும் நடக்காது’’என்று குறிப்பிட்டார்