தனி நபர் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம்! – குடியரசுத் தலைவர் முழு உரை! – AanthaiReporter.Com

தனி நபர் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம்! – குடியரசுத் தலைவர் முழு உரை!

இந்த நாடு நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம், நம் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு அடையாளத்திற்கும், அதில் உரிமை உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும், தனிநபர் ஒவ்வொரு வருக்கும் இந்த நாடு சொந்தம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.

70 ஆவது இந்திய குடியரசு தின விழாவையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை இதோ:

அன்பார்ந்த சக குடிமக்களே, இந்த 70 ஆவது குடியரசு தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நமது ஜனநாயகம் மற்றும் குடியரசு விழுமியங்களை கொண்டாடும் நிகழ்ச்சி இது. சமுதாயத்தில் அனைத்து குடிமக்களும், சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை எய்திட நாம் உறுதியேற்கும் நிகழ்ச்சி இது. அனைத்திலும் மேலாக இந்தியன் என்ற உணர்வை கொண்டாடும் நாள் இதுவாகும்.

ஒவ்வொரு குடியரசுத் தினமும் விலை மதிப்பற்றது. இந்த குடியரசு தினமும் நமது வாழ்க்கையில் ஒவ்வாரு தினமும் அதேபோல் விலை மதிப்பற்றது. இந்த ஆண்டு அதிலும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் காலனி ஆதிக்க நாடுகள் விடுதலை பெறுவதற்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் விடுதலை பெறவும், உந்து சக்தியாக இருந்து நம்மை வழிநடத்திய மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் அக்டோபர் 2 ஆம் தேதி அமைகிறது. காந்திஜி இன்னமும் நமது குடியரசின் தார்மீக வழிகாட்டியாக விளங்குகிறார்.

அவரது போதனைகள் நமது கொள்கைகளுக்கும், நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலகமே உவகையுடன் பகிர்ந்து கொள்ளும் நாளும் ஆகும்.

காந்திஜி பிறந்த நாளில் இருந்து ஒரு சில வாரங்களில், நவம்பர் 26 ஆம் தேதி நமது அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 70 ஆவது ஆண்டும் வருகிறது. அந்த அற்புதமான-தொலைநோக்கு கொண்ட அந்த அரசியல் சாசனம் தான் அடித்தளம் நமது குடியரசுக்கு அமைத்துக் கொடுத்தது. அந்த அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த கொள்கையும் தேச பக்தியும் மிக்க ஆண்களும்- பெண்களும்தான் இந்த சாசனத்தை வகுத்து அளித்தார்கள். இந்த அரசியல் சாசனத்தை வரைவு செய்த குழுவின் தலைவராக விளங்கிய டாக்டர் பீமாராவ் அம்‍பேத்கரை நாம் நினைவு கூர்வோம். அவருக்கும், அரசியல் சாசனத்திற்கும் மதிப்புக் காட்டும் வகையில் இந்த ஆண்டு அரசியல் சாசன தினத்தை உரிய முறையில் நாம் கொண்டாடவுள்ளோம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டு நமது குடியரசை இன்னமும் வடிவமைக்கும் விழுமியங் கள் – நமது ஜனநாயகத்திலும், அரசியல் சாசனத்திலும் பதிக்கப்பட்டுள்ள அந்த விழுமியங்கள் நமது மக்களின் வல்லமையையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இந்த ஆண்டில் இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக பொறுப்புள்ளது. 17 ஆவது மக்களவையை தேர்ந்தெடுக்க வேண்டிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளோம். நமது ஜனநாயகத்தில் பதிக்கப்பட்டுள்ள கொள்கைகளும், லட்சியங்களும் அப்போது முழுவடிவம் பெறும். ஒவ்வொரு ஐந்தாண்டிலும் இந்த நாட்டின் தலைவிதியை மக்களின் வாக்குகள் நிர்ணயிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த வாக்காளர்கள் முதல்முறையாக இந்த ஆண்டு புதிய மக்களவையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

தேர்தல் என்பது வெறும் அரசியல் பயிற்சி அல்ல. தேர்தல் என்பது கூட்டான அறிவுத் தேடல். செயல்பாட்டிற்கு விடுக்கப்படும் கூட்டான அழைப்பு. சமத்துவ சமுதாயத்தின் லட்சியங்களையும் நம்பிக்கையையும் மீண்டும் புதுப்பிக்க உறுதியேற்கும் நிகழ்வு. தனிப்பட்ட மனிதர்களின் பன்முக உவகைகளை பிரதிபலிக்கும் நாள் குடியரசு தினமாகும். வாக்களிப்பதை ஒரு புனித கடமையாக இது உயர்த்துகிறது. தவறாமல் இந்த உரிமையை செலுத்துங்கள். யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது அவரவர் சொந்த விருப்பம். ஆனால், வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தற்போது நமது நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. 1940-களிலும் 1950 களின் ஆரம்பக் காலத்திலும் நாம் சந்தித்த அ‍தே முக்கிய காலக் கட்டத்தை இப்போதும் சந்திக்கிறோம். அந்த வகையில் பார்த்தால் இது ஒருதலைமுறைக்கு ஒருமுறை மட்டுமல்ல – ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் காலம் என்றுதான் கூற வேண்டும்.

இதுமட்டுமின்றி, நமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும் வளர்ச்சி அடைந்த புதிய இந்தியாவை நிர்மாணிக்கவும், அதன் மக்கள் மேற்கொண்டுள்ள பயணத்தில் இந்த தேர்தல் ஒரு மைல்கல் எனலாம். நமக்கு நினைவு தெரிந்த காலம் முதல் வறுமையை முற்றிலுமாக ஒழிக்கும் வாயில்படியில் முதல்முறையாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் சமமான ஆரோக்கிய வாழ்வை பெற்றுத் தரும் திட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். குறைந்த செலவில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் பெறுவதும், உடலில் தொழில்நுட்ப சாதனங்களை செலுத்தி சிகிச்சை அளிப்பதும் இப்போது பெரும்பாலான மக்களுக்கு கிட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எந்தக் காலத்திலும் இல்லாத அளவில் அதிகப்படியான மக்கள் நவீன துப்புரவு மற்றும் மின் வசதிகளுடன் கூடிய வீடுகளை பெறும் நிலை உருவாகியிருக்கிறது.

துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து, மேம்படுத்தப்பட்ட ரயில்வே மற்றும் மெட்ரோ சேவைகள், தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் உள்நாட்டில் குறைந்த செலவில் பயணிப்பதற்கான விமான சேவை இவை தவிர மொபைல் தொலைபேசி, தரவுகளை பெறுவதற்கான வாய்ப்பு முதலியவற்றால் நமது மக்கள் என்றும் இல்லாத அளவில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒற்றுமை இணைய தள இணைப்பின் மூலம் இப்போது மேலும் உறுதிப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம் காரணமாக நமது விவசாயிகளும், வீரர்களும் புத்தெழுச்சி பெறுகிறார்கள். ஆண்டாண்டுகாலமாக புதிய தொழில்நுட்பத்தை அறிந்திராத நமது குழந்தைகளின் திறனை அது மேம்படுத்துகிறது. இதன்காரணமாக புத்தெழுச்சி ஏற்பட்டு நமது இளைஞர்கள் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை பெறுகிறார்கள். அதன்மூலம் உலகின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார்கள்.

நமது நாட்டில் நான் மேற்கொண்ட பயணங்களிலிருந்தும், பல்வேறு சமுதாய மக்களின் சந்திப்பிலிருந்தும் இந்த முன்னேற்றம் அவர்களின் பாராட்டை பெறுவதை உணர்கிறேன். பொருளாதாரத்தில் பற்றாக்குறையுடன் வாழ்ந்த நமது முன்னோர்கள் அதனை நிவர்த்தி செய்ய மேற்கொண்ட முயற்சியும் கண்ணுக்கு தெரிகிறது. ஒவ்வொரு பகுதியாக, ஒவ்வொரு பண்டமாக இந்த பற்றாக்குறையை போக்கி, அவற்றை கிடைக்கச் செய்வதில் நாம் ஈடுபட்டோம். படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினோம். உணவுப் பொருளானாலும், எரிவாயு சிலிண்டர் ஆனாலும், தொலைபேசி இணைப்புகளானாலும், பாஸ்போர்ட் பெறுவதில் கிடைத்துள்ள கண்கூடான வாய்ப்பானாலும் இந்த மகத்தான மாற்றம் அதில் பிரதிபலிக்கிறது. பல்வேறு சமயங்களில் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகளை தந்துள்ளது. எதுவாக இருந்தாலும் உள்ளடக்கிய தன்மை ஒரு தார்மீக சக்தியாக விளங்குகிறது.

நமது மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டாமல் இந்தியாவின் வளர்ச்சி முழுமையாகாது. இந்த நாடு நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம், நம் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு அடையாளத்திற்கும், அதில் உரிமை உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும், தனிநபர் ஒவ்வொரு வருக்கும் இந்த நாடு சொந்தம். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் மிகப்பெரிய பலம். உலகிற்கே அதுதான் அற்புதமான எடுத்துக்காட்டு. இந்திய மாதிரி என்பதை அதன் பன்முகத் தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி என்ற மூன்று தூண்கள்தான் தாங்கி நிற்கின்றன. இந்த மூன்றையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டுமே தவிர, ஒன்றை விட்டு மற்றொன்றை மட்டும் ஏற்றுக் கொள்வது முடியாத காரியம்.

ஒவ்வொரு பெண்குழந்தைக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் சமஉரிமை, சம வாய்ப்பு வழங்குவது தான் இந்திய சமுதாய புரட்சிக்கு அளவுகோல். சரியான வாய்ப்பு கிட்டினால் நமது பெண் மக்கள், ஆண்களுக்கு சமமாக வளர்ச்சி பெறுவதுடன் அவர்களையும் விஞ்சிவிடுவார்கள் என்பது எனது அனுபவம். ஒவ்வொரு துறையிலும்- கல்வி முதல் படைப்பாற்றல்மிக்க கலை வரை, விளையாட்டு முதல் ஆயுதப்படை வரை நமது நாட்டு பெண்கள் பீடுநடைபோடுகிறார்கள். அவர்களை தடுக்கும் சக்தி எதுவும் இல்லை. அதுதான் இந்தியாவின் எதிர்காலத்திற்கான பாதை.

நமது குடியரசு நீண்டதூரம் பயணித்துள்ளது. அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் நம்மை இந்த முன்னேற்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். வறுமையில் இருந்து இவ்வளவு உயர்ந்த நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றிருப்பதற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். இன்னமும் கடக்க வேண்டிய தூரம் உண்டு. நிரப்ப வேண்டிய பள்ளங்களும் இருக்கின்றன. துடைக்க வேண்டிய கண்ணீர் இன்னமும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நமது சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்கான அளவுகோலை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கல்வி அறிவு பெற்ற சமுதாயத்திலிருந்து அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை நோக்கி செல்வதே அதற்கான அளவுகோலாகும். எல்லா சமுதாயத்திற்கும், எல்லா பிரிவினருக்கும் இடம் உண்டு என்ற நிலையில் இருந்து அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் நிலைக்கு செல்வதே நம் ஒவ்வொருவரிலும் ஒளிந்து கிடக்கும் மகத்தான சக்தியாகும்.

மகாத்மாகாந்தி இந்தியா எனது கனவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தில் ஒரு ஏழையின் குரல் எப்போது ஓங்கி ஒலிக்கிறதோ, உயர்ந்த வர்க்கம், தாழ்ந்த வர்க்கம் என்று இல்லாத நிலை எப்போது ஏற்படுகிறதோ, அனைத்து சமுதாயங்களும் முழுமையான இணக்கத்துடன் எங்கே வாழ முடிகிறதோ, ஆடவருக்கு சமமாக பெண்களும் எங்கே சம உரிமை பெறுகிறார்களோ, அந்த இந்தியாவை படைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். நாம் நிர்மாணிக்கும் புதிய இந்தியாவில் இது நமக்கு நினைவூட்டும் கொள்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில் திறமை வாய்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்க அரசியல் சட்டம் அண்மையில் திருத்தப்பட்டது நாம் கனவு காணும் இந்தியாவையும், மகாத்மா காந்தி கனவு கண்ட இந்தியாவையும் படைப்பதாக அது அமையும்.

வீட்டிலும், நாட்டிலும் பங்காளிகளாக விளங்குவதே ஒரு சரியான குடும்ப வாழ்வாகும் என்று நமது அனுபவம் தெரிவிக்கிறது. பணியிடத்தில் பங்காளிகளாக இருப்பது தொழிலை அபிவிருத்தி செய்யும். பல்வேறு துறையிலும் ஈடுபட்டிருப்பவர்கள் பங்களிப்பதன் மூலம் சமுதாயத்தை கட்ட முடியும். அரசிலும், மக்களிலும் பங்களிப்பை செலுத்துவதன் மூலம் புதிய நாட்டை புதிய உலகை படைக்க முடியும். குடும்பங்களையும், நாடுகளையும், உலகையும் ஒருங்கிணைக்கும் கயிறாக பங்களிப்பு திகழும். அதன்மூலம் உலகமே ஒரு குடும்பம் என்ற உன்னத நிலையை எய்த முடியும்.

ஒளிவுமறைவற்ற தொடர்பு, நாணயமான உரையாடல், தங்குதடையற்ற இரக்கம் மூலமாகத்தான் பங்களிப்பை மேம்படுத்த முடியும். இது குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். வரலாற்று ரீதியாக பின்தங்கியிருக்கும் பிரிவினர் குறைகளை தீர்க்கவும், கேட்கவும் இந்த பங்களிப்பு உதவிகரமாக இருக்கும். வேகமாக மாறிவரும் சமுதாய அமைப்பில் அதுபோன்ற உரையாடல் களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மைவிட குறைந்த வாய்ப்பை பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் நாம் கருணையுடன் நடந்து கொள்வது இதில் முக்கியமானது.

மக்களின் நல்வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர் தனிநபர் என்றாலும், குழு என்றாலும் அவர்கள் மீது சமுதாயம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறது. மக்களுக்கு தொண்டு செய்வதும் அதற்கான அர்ப்பணிப்பும் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதற்காக பணியாற்றுவதும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும். நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் பங்களிப்பு, தனிநபராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும், போற்றப்பட்டே ஆக வேண்டும்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாம் பின்பற்ற வேண்டிய நெறிகள் இவை. அமைதியை பேணுதல் பருவநிலை மாற்றத்தை குறைத்தல், வளர்ச்சியில் பங்களிப்பு அல்லது பேரிடர் காலத்தில் மனிதாபிமான உதவி ஆகியவை உலகை இந்தியா அணுக வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும். இதன்மூலம் இந்தியா சர்வதேச அபிமானத்தை பெறுகிறது. நமது குடியரசின் வேர்கள் இவைதான். கொள்கைகளும் இவைதான். ஜனநாயக லட்சியங்களை அடைவதற்கு ஜனநாயக முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே நமது குடியரசின் லட்சியம். பன்முகத்தன்மை கொண்ட லட்சியங்களை அடைய பன்முக வழிகள் உள்ளடக்கிய இலக்கை அடைவதற்கு, உள்ளடக்கிய வழிமுறைகள், கருணை மிகுந்த லட்சியத்தை நோக்கிய வழிகள் ஆகியவைதான் நமது அரசியல் அமைப்பின் லட்சியமாக உள்ளது.

இந்த கொள்கைகள் நமது பாதையில் ஒளியேற்றட்டும். இந்திய மக்களாகிய நாம் என்று அரசியல் சாசனத்தில் ஆரம்பிக்கும் அதே முழக்கம் நமது கொள்கைகளை ஏந்திப் பிடிப்பதாகவும் அமையட்டும்.

இந்த வார்த்தைகளுடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.