ஜனாதிபதி ; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு!

ஜனாதிபதி ; எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு!

இந்திய அரசியலில் ஹாட் டாப்பிக்காகிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தங்கள் நிலையை தீர்மானிக்க 17 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. நாடாளுமன்ற நூலகத்தில் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே, அகமது படேல் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா, திமுக சார்பில் கனிமொழி, தேசிய மாநாட்டு கட்சியின் சார்பில் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஓ.பிரையனும், சமாஜ் வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவும், பகுஜன் கட்சி சார்பில் சதீஷ் மிஸ்ராவும் பங்கேற்றனர்.

மதச்சார்பற்ற ஜனதாதளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஏஐயுடிஎப் ஆகிய கட்சிகளின் பிரதிநதிகளும் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய இயல்புக்கு மாறாக தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. அவருக்கு எதிராக வேறு வகுப்பினரை வேட்பாளராக நிறுத்தினால் தலித் விரோதி என எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க தலித் ஒருவரை நிறுத்த வேண்டிய அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.கோபால கிருஷ்ண காந்தி, பிரகாஷ் அம்பேத்கர் ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக இடது சாரி கட்சிகள் குறிப்பிட்டனர். காங்கிரசும் மற்ற கட்சிகளும் மீராகுமாரின் பெயரை முன்மொழிந்தன. அதனால் நிலைமை மாறியது. மீரா குமாரின் மக்களவை தலைவர் அனுபவம் ஐஎப்எஸ் பணிகளில் செயல்பட்ட அனுபவம் காரணமாக அவரை சிறந்த வேட்பாளராக நிறுத்தலாம் என காங்கிரஸ் கூறியது.இதனை மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக மீராகுமார் பெயர் அறிவிக்கப்பட்டது.

மீரா குமார் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை முழு மனதோடு வரவேற்பதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார். தனது கட்சி அவரது வெற்றிக்கு பாடுபடும் என உறுதியளித்துள்ளார். மீராகுமார் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தை விடுதலை சிறுத்தைகளின் நிறுவனரான தொல்.திருமாவளவன் வரவேற்பதாக கூறினார். அதிமுகவின் எல்லா அணிகளும் பாஜகவுக்கு ஆதரவு என்ற தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த நான்கு ஆண்டு காலத்துக்கும் அதிமுக நிர்ப்பந்தம் இல்லாமல் ஆட்சியை தொடர எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சிளின் வேட்பாளராக மீராகுமார் தேர்ந்து எடுக்கப்பட்டதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றுள்ளார். மீராகுமார் சிறந்த நிர்வாக திறமை உள்ளவர் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து நிர்வாக பணிகளை சிறப்பாக நடத்தி செல்வார் என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.பாஜக தலித் வேட்பாளரை குடியரசுத் தலைவர் பதவிக்கு அறிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் ஒரு தலித்தை வேட்பாளராக அறிவித்தது தேவையற்ற நடவடிக்கை என புதிய தமிழகம் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பா.ஜ.க. ஆதரவு கோரியது.

வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பாஜக தலைவர்கள் ஆதரவு கோரினார்கள். மேலும் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் பாஜகவினர் கூறி வந்தனர்.இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தின. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க்து.

Related Posts

error: Content is protected !!