நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தல் – ஜூலை 17ம் தேதி நடக்கும்! – AanthaiReporter.Com

நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தல் – ஜூலை 17ம் தேதி நடக்கும்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் புதிய முதல் குடிமகனைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மாலை 5 மணி அளவில் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் எனப்படும் ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 4120 எம்.எல்.ஏ.க்களும், மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும், மாநிலங்களவை உறுப்பினர் 233 பேரும் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத் தேர்தலுக்கான பணி அட்டவணையை நஜீம் ஜைதி இன்று வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பணி தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை வெளியீட்டோடு துவங்குகிறது.இந்த அறிவிக்கையை ஜூன் மாதம் 14ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என நஜீம் ஜைதி கூறினார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் மாதம் 28 ஆகும். ஒவ்வொரு வேட்பு மனுவிலும் 50 பேர் முன்மொழியவும் 50 பேர் வழிமொழியவும் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் மாதம் 29ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை மாதம் முதல் தேதி ஆகும்.

வாக்குப்பதிவு ஜூலை மாதம் 17ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாநில தலைநகரிலும் அல்லது யூனியன் பிரதேச தலைநகரிலும் வாக்களிப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை ஜூலை மாதம் 20ம் தேதி புதுடில்லியில் நடைபெறும். முடிவுகள் அன்றே வெளியிடப்படும். வாக்குப்பதிவு நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் தனி அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் பணிகளை முன்நின்று நடத்துவார்.இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார்.

அது சரி நாட்டின் முதல் குடிமகன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை குறித்து அறிய ஆர்வமா?.

ஜனாதிபதியாகப்பட்டவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுக வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

யாருக்கு வாக்குரிமை?:

மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்

எம்எல்ஏக்கள் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பானது, குறிப்பிட்ட மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழக எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும், உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் மாறுபடும். ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பானது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் தொகையே ஓட்டின் மதிப்பாகக் கருதப்படும்.

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/ மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000

உதாரணமாக, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 4,11,99,16 (1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி). மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதன்படி தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு – 4,11,99,168/234*1000=176.06.

தமிழக எம்எல்ஏக்களின் ஓட்டுகள் மொத்த மதிப்பு 176.06 * 234 = 41,198 (41198.04).

எம்எல்ஏக்கள் ஓட்டு அடிப்படையில் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு அதிகமாகும். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட சிக்கிம் மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு நாட்டிலேயே குறைவானது.

எம்பிக்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:

மாநில எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பினை, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும். மக்களவை மற்றும் மாநிலங்களைவையை சேர்த்து மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 776 ஆகும். நாட்டிலுள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474. அதன்படி கணக்கிட்டால் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு தேசிய தலைநகர் மற்றும் மாநில தலைநகரங்களில் நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் நிலையில், வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டைத் தாண்டும்பொழுது வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பர். இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் தேவை. அதாவது, 5,49,442 வாக்குகள் பெற்றால் வெற்றிபெற்று விடலாம்.

கட்சிகளின் நிலை:

தற்போது ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு 5,32,03‌7 வாக்குகள், அதாவது 48.64 சதவீத வாக்குகள் உள்ளன. முதல் குடிமகன் தேர்தலில் வெற்றிபெற ‌அந்தக் கட்சிக்கு தேவைப்படுவது 14,40‌5 வாக்குகள் மட்டும்தான். அதேபோல எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூடும் மதச்சார்பற்ற அணிக்கு 35.07 சதவீத வாக்குகள் உள்ளன. மாநில கட்சிகளான அதிமுக (தமிழகம்), பிஜேடி (ஒடிசா), டிஆர்எஸ் (தெலங்கானா), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரா), ஆம்ஆத்மி (டெல்லி மற்றும் பஞ்சாப்), ஐஎன்எல்டி (ஹரியானா) ஆகிய 6 கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 13.06 சதவீத வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த 6 கட்சி களின் ஆதரவைப் பெறும் நிலையில், அந்த கூட்டணியின் வாக்குகள் சதவீதம் 48.53ஆக மாறும். இது பாஜக கூட்டணியை விட 0.09 சதவீதம் மட்டுமே குறைவா கும்.  அதனால், ஜனாதிபதித் தேர்தலில் இந்த கட்சிகள் முக்கிய பங்காற்றும் என்பதால் நேஷனல் அளவில் அடிக்கடி பிளாஷ் நியூஸ் எதிர்பார்க்கலாம்!