இந்தியாவில் ரகசியமாக ஒளிப்பரப்பாகி வரும் பலான சேனல்கள் + பாகிஸ்தான் சேனல்கள்!

இந்தியாவில் ரகசியமாக ஒளிப்பரப்பாகி வரும் பலான சேனல்கள் + பாகிஸ்தான் சேனல்கள்!

நம்ம இந்தியாவிலே 850க்கும் அதிகமான தனியார் டிவி சேனல்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவில் பல தொலைக்காட்சி சேனல்கள் மத்திய அரசின் அனுமதி இன்றி ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரோ உதவியை மத்திய அரசு நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான்! இன்னும் சரியாகச் சொல்வதனால், கடந்த இருபதுஆண்டுகளில் கடும் பாய்ச்சலைக் காட்டியது இந்தியத் தொலைக்காட்சித்துறை.

இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் காரணமாக அமைந்தன.

1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக நிறுவப்பட்டன.

2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என். ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியாவில் ஒளிபரப்பைத் துவங்கின.

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.

1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் பரவலாவதற்குத் தடைகள் இருந்தன. அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட திட்டத்தை ஒட்டி அமைவதுதான். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது.

1990களில் தொடங்கிய செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில தடையாக இருந்தன. எப்படி?

செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டாலும் செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக இணைப்புப் பெற்று (Up link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.

அந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை வாடகையாகப் பெற்றும் விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிரப்பின.
இதனால் மிகுந்த அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் ஏப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் டிஷ் ஆன்டனாவில் பெற்ப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

ஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது பெற்றிருந்தது. இத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதன்மூலம், அவற்றிற்க அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் காலதாமதமும் ஏற்பட்டன. பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 1998-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.

புதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்களின் பங்கு 80 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டது.(இது தற்போது மற்றம் செய்யப்பட்டுள்ளது) தொலைக் காட்சி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் மையத்தளமாக நம்ம சிங்காரச் சென்னை தான் விளங்கியது. புதிய ஒளிபரப்புக்கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் உள்ள வி.எஸ்.என்.எல். நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றுடன், புதிதாக 40 அடி விட்டமுள்ள ஸ்டாண்ட் டர்டு “பி” ஆன்டெனாவை வெற்றிகரமாக சோதித்தது. அதிலிருந்து சென்னை, செயற்கைக் கோள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான இணைப்பு மையமாக மாறியது. இன்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றன.

இந்திய அரசு நிறுவனமான வி.எஸ்.என்.எல். இன்டல்சாட் எனும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. இந்த இன்டல் சாட் 150 நாடுகளுக்கு வீடியோ ஒளிபரப்பு மற்றும் தொலைபேசித் தொடர்புகளைத்தரும் 24 செயற்கைக்கோள்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதில் ஐந்து செயற்கைக் கோள்கள் இந்தியப் பெருங்கடலுக்கு மேலிருந்து இயங்குகின்றன. இன்று இந்தியாவிடம் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு உதவும் ஒன்பது செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன.

இன்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தொலைக்காட்சிகளின் கண்காணிப்பில் இருக்கிறது. அவற்றுக்குத்தேவை ஒரு தொலைக்காட்சிக் கேமராவும் ஒரு சூட்கேஸ் உள்ளே வைத்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வந்துவிட்ட வி.எஸ்.ஏ.டி. (Very Small Aperture Trasmitters) என்ற கருவியும் தான். எட்டுக்கோடி இந்திய இல்லங்களில் (80 மில்லியன்) தொலைக் காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. அதில் ஐந்துக் கோடியே 20 இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் (52 மில்லியன்) கேபிள் இணைப்புப் பெற்றவை. ஐரோப்பாவின் அனைத்து நாடுகளை விடவும் இது அதிகம்.

இந்தியாவில் இன்று 20,000 கேபிள் மையங்களிலிருந்து 40,000 கேபிள் முகவர்கள் செயல் படுகின்றனர். மாநில மற்றும் சிறு வட்டார மொழிகள் உட்பட இந்தியாவில் 27 மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிகழ்கின்றன. மேலும் 20 செயற்கைக்கோள்களில் உள்ள 200 டிரான்ஸ் பாண்டர்கள் மூலம் 300 மின்னணுத் தொலைக்காட்சி அலைவரிசைகளை இன்று இந்தியாவில் காண இயலும். இன்றைய தேதியில் இந்தியாவில் 150 நிறுவனங்களுக்கு 400 செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 180 தொலைக்காட்சிகளின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.
ஓராண்டில் இந்தியக் கேபிள் டிவி சந்தையில் புழங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 9,000 கோடி ரூபாய்.

ஆனாலும் இன்று வரை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சேனல்களுக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், சீனா, ரஷ்யா உட்பட பல வெளிநாட்டு செயற்கைக் கோள்களின் அலைவரிசைகள் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதனால் அந்த வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் அதன் பல சேனல்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக ஒளி பரப்பாகி வருகிறது.

குறிப்பாக இந்தப் பட்டியலில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச சேனல்கள், பாகிஸ்தான் நாட்டின் சேனல்கள் ஆகியவை வடகிழக்கு உள்ளிட்ட பல பகுதியில் ஒளிபரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல, அந்த செயற்கைக்கோள்கள் இந்தியாவில் ஒளிபரப்பாகும் சில சேனல்களை உள்வாங்கி தங்கள் நாடுகளின் பல பகுதிகளில் இலவசமாக ஒளிப்பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் கட்டணம் வசூலிக்கப்படும் தமிழ் சேனல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.

இதற்காக, அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சிகளின் ‘டிஷ் ஆன்டெனா’ எனப்படும் சிறு குடைகளை அந்த செயற்கைக்கோள்கள் உள்ள திசையை நோக்கி திருப்பி வைக்க வேண்டும். அப்போது, டிஷ்களுக்கான சிம் கார்டு அட்டை பொருந்தியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, “சட்டவிரோதமாக பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளின் சேனல்களை பார்ப்பது நம் நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக மத்திய அரசு கருதுகிறது. இந்த செயற்கைக்கோள்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய கருவியை கண்டுபிடிக்குமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (இஸ்ரோ) வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளனர். வளர்ச்சி ஒரு பக்கம் என்றாலும் இது போன்ற பொருளாதார மற்றும் சமூக வீழச்சியும் நடப்பதை தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தானே உள்ளது

.

error: Content is protected !!