இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா! – AanthaiReporter.Com

இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா!

பொள்ளாச்சி சம்பவத்தை போன்று சில சம்பவங்களை நண்பர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

1. 2000 ஆம் ஆண்டு: தருமபுரியில் கல்லூரி மாணவிகளை அதிமுக தொண்டர்கள் உயிரோடு பேருந்தில் எரித்த போது மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தற்போது சுதந்திரமாக விடுதலையும் ஆகிவிட்டனர். இறந்த மாணவிகளுக்கு என்ன நீதி கிடைத்து விட்டது.

2. 2004 ஆம் ஆண்டு: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாயினர். 25 பேரை கைது செய்து, தாளாளருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதித்தது. பள்ளிக்கு அனுமதி அளித்த பல அரசு அதிகாரிகள் குறைவான தண்டனையில் வெளியில் வந்து விட்டனர். 11 அரசு அதிகாரிகளை குற்றவாளிகள் இல்லை என விடுதலையும் செய்துவிட்டது. இதில் என்ன நீதி பறைசாற்றப்பட்டது.

3. 1996 ஆம் ஆண்டு: நாவரசு என்ற மருத்துவம் படித்த மாணவரை ஜான் டேவிட் என்ற மாணவர் துண்டு துண்டாக வெட்டி ராகிங் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை வைத்து அப்போது மாறன் என்ற திரைப்படம் வந்தது. அதில் இதற்கு என்ன தீர்வு எனவும் கூறியது. நடைமுறையில் அந்த தீர்வு தான் தேவைப்படும் எனவும் தோன்றுகிறது. அதன் பிறகு, 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மறுபடியும் சிறையில் அடைத்தனர்.

மேற்கூறிய சில வழக்குகளை போல பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து கொண்டு தான் உள்ளனர். அதில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது மிகவும் வேதனையாக தான் உள்ளது.

நமக்கு தகவல் கிடைத்த சில உண்மை சம்பவங்கள்.

>> நண்பர் ஒருவர் தனது பணப்பையை (Money Purse) மருத்துவமனையில் தவறவிட்டு, அதை கண்டுபிடிக்க CCTV காணொளி பெற்று மற்றும் திருடியவர் புகைப்படத்தோடு தனது புகாரை காவல் நிலையத்தில் அளித்தால் FIR கூட பதிவு செய்யவில்லை. இவர் மட்டுமல்ல, திருடப்படும் பொருட்களை கண்டுபிடிப்பதில் காவல்துறை எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. ஒருவேளை காவல்துறை திருடர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும், திருடிய பணத்தின் உதவியோடு நல்ல வழக்கறிஞரை பிடித்து வெளியில் வந்து வருகின்றனர்.

>> ஒருவர் தனது தொழில் தேவைக்காக பணம் வேண்டும் என கூறி 50 பேரிடம் சுமார் 80 லட்சம் அளவில் கடனாக பெற்றுள்ளார். சொந்த வீடு, விலை உயர்ந்த கார் வைத்துள்ளதால் 50 பேரும் அவரை நம்பி கடன் கொடுத்துள்ளனர். ஒருநாள் கார் மற்றும் வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. இதனை அறிந்த இவர்கள் தங்களின் பணத்தை திரும்பி தராததால் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், ஏமாற்றியவரிடம் பணத்தை பெற்று கொண்டு 50 பேரிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசனையும் அளித்துள்ளார் அந்த காவல் நிலைய ஆய்வாளர். தற்போது IP கொடுத்துவிட்டு, பலரின் பணத்தை ஏமாற்றிவிட்டு நிம்மதியாக உள்ளார்.

>> சென்ற வாரம் ஒருவர் நம்மை அழைத்தார். சென்னைக்கு வந்து வேலைக்கு சேர்ந்து சிறிது சிறிதாக 8 லட்சம் வரை சேர்த்து வைத்து சிட்டிக்கு வெளியில் மனை வாங்க ஒருவரிடம் பணம் அளித்துள்ளார். பணம் வாங்கிய நபர் அக்ரீமெண்ட் போட்டுவிட்டு அந்த மனையை வேறு ஒருவரிடம் விற்று உள்ளார். காவல்துறையிடம் சென்றால் எதிர் பார்ட்டியிடம் பணத்தை வாங்கி கொண்டு FIR போடவில்லை. நீதிமன்றம் செல்லலாம் என நினைத்தால், தீர்வு காண பல வருடங்கள் ஆகும் எனவும், கிடைக்கும் பணத்தில் இவ்வளவு பணம் வழக்கு செலவாக தர வேண்டும் என கூறி உள்ளார்.

>> போஸ்டர், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் குறித்த புகாரை காவல் நிலையத்தில் அளித்த அடுத்த 10 நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபர் ஆளுங்கட்சி நபரால் மிரட்டப்படுகிறார். இதில், காவல்துறை செய்த காரியத்திற்க்கு என்ன தீர்வு?

>> போராளி முகிலன் அவர்கள் பலமுறை, ஆற்றுமணல் திருடி விற்கும் நபர்களை பிடித்து கொடுத்தால் காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவரது உயிருக்கு தான் ஆபத்து வந்துள்ளது. இதற்கு என்ன தீர்வு?

>> நிலத்தடி நீரை எடுத்து விற்பது குற்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பற்றிய புகார் அளித்தால், காவல்துறை / அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதற்கு என்ன தீர்வு?

>> கிராமசபை மூலம் புதிதாக டாஸ்மாக் கூடாது என தீர்மானம் கொண்டு வருகிறோம். கடையை மூடுகிறோம் என கூறும் அரசு, மறுபுறம் புதிதாக திறந்து கொண்டே உள்ளது. மக்கள் போராடினாலும், அவர்களை கைது செய்கிறது. டாஸ்மாக் கடை வேண்டாம் என கூற அப்பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா?

இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு தான் உள்ளது. காவல்துறை யாருக்கு சாதகமாக உள்ளது என தாங்களே கண்கூடாக பார்க்கலாம். ஒன்று. அதிகார வர்க்கத்திற்கு அடியாளாக செயல்படுகிறது அல்லது பணம் தருபவருக்கு ஆதரவாக செயல்படுகிறது. காவல்துறை மட்டுமல்ல. அரசு அதிகாரிகளும் இதே போன்று தான் செயல்படுகிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய தான் அரசு அதிகாரிகள். செய்கிறார்களா? மக்களை காக்க தான் காவல் துறை. காக்கிறதா? மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தான் அரசியல்வாதிகள். தீர்க்கிறார்களா?
விரைந்து நீதி அளிக்க தான் நீதிமன்றங்கள். நீதி கிடைக்கிறதா?

ஆனாலும், அனைவரும் பெருமையாக கூறி கொள்வோம். நமது நாடு ஜனநாயக நாடு என்று. இதற்கு தீர்வு என்னவென்று அனைவரும் யோசிக்க வேண்டும். அதிகாரத்திற்கு தான் வலிமை அதிகம். ஆனால், அதை அயோக்கியர்களிடம் கொடுத்துவிட்டு கண்ணீர் வடிப்பது மக்களின் வேலையாக உள்ளது.

ஒரு தலைவர் வந்தால் பிரச்சனை தீரும் என்றில்லை. ஒவ்வொரு தெருவிற்கும் தலைவர் உருவாக வேண்டும். அதுபோன்று உருவாகும் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டு வருவருக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க வேண்டும். அன்று தான் உண்மையான சுதந்திரம்.

அகஸ்தீஸ்வரன்