ச்சிச்சீ.. உன் ரூட்டே வேணாம் – பாக் வான் வழியை புறகணிக்கும் பிரதமர் மோடி! – AanthaiReporter.Com

ச்சிச்சீ.. உன் ரூட்டே வேணாம் – பாக் வான் வழியை புறகணிக்கும் பிரதமர் மோடி!

ஏர் டிராஃபிக் வார் நடக்கும் சூழலில் கிர்கிஸ்தான் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விவிஐபி விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல விசேஷ அனுமதி கிடைத்த நிலையில் அந்த நாட்டின் மார்க்கத்தில் பறக்காது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.அதை தொடர்ந்து இந்தியாவின் கிழக்கு எல்லையை ஒட்டிய வான்வழிகளை பாகிஸ்தான் மூடியது. அதன் பின் மொத்தமுள்ள 11 வான்வழிகளில் 2 வழிகளை மட்டும் பாகிஸ்தான் திறந்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 13 மற்றும் 14ம் தேதி கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பறந்து செல்ல மத்திய அரசு பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டது.

கடந்த மாதம் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன் பிஷ்கேக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். அப்போது அவரது விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பிஷ்கெக் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அனுமதி கேட்டு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்றது. பிரதமர் மோடி செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பறந்து செல்ல அனுமதி அளித்தது.

இதற்கிடையில் பிரதமர் மோடி செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பறக்க கூடாது என்று சில முன்னாள் தூதர்கள், அரசியல் நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தியா தான் எடுத்த கடினமான முடிவுகளால் ஏற்படும் சிக்கல்களை சந்திக்க முடியாமல் திணறுவதாக பாகிஸ்தான் கருதக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக பறக்காது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி செல்லும் விவிஐபி விமானம் பாகிஸ்தான் வான்வழிக்கு பதிலாக ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பறந்து சென்று பிஷ்கெக் நகரை அடையும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.