குடி பெயர்ந்து வந்தவர்களுக்கும் குடியுரிமை: – வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி! – AanthaiReporter.Com

குடி பெயர்ந்து வந்தவர்களுக்கும் குடியுரிமை: – வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி!

கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரை யும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் மற்றும்  பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். ஆனாலும் பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர முழு உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாஜ்பாய் சிலையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி இவைதான் நமது குறிக்கோள் என்று கூறினார். மேலும் அவர் பேசிய போது, “ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களுக்கு அமைதி யான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் இது போன்ற சவால்களுக்கு தன்னம்பிக்கையுடன் தீர்வு கண்டுள்ளனர்.

தரமான சாலைகள், போக்குவரத்து மற்றும் பாதாள சக்கடை வசதிகள் உள்ளிட்டவை நமது உரிமையாகும். அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும்.தரமான கல்வி பெறுவது நமது உரிமையாகும். அந்த கல்வி நிறுவனங்களை பாதுகாப்பதும், ஆசிரியர்களை மதிப்பதும் நமது கடமையாகும்.

பாதுகாப்பான சுற்றுப்புறம் என்பது நமது உரிமையாகும். காவல்துறையினரின் செயல்பாடுகளை மதிப்பது நமது கடமையாகும்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா? என்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பல்கலைக்கழகத்துக்கு, உ.பி. மாநில அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசம் மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். 37 வயதில் எம்.பி.யாக தேர்வான வாஜ்பாய், பாராளுமன்றத்துக்கு 9 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அதிலும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்துதான் வாஜ்பாய் அதிக முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.