வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்! – AanthaiReporter.Com

வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினம் சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்தியா அரசு முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி அந்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இன்று வெளியிட்டார்.

35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப் பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் உள்ளது. சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்றும் அதற்கு கீழ் 100 ரூபாய் என்று பொறிக்கப்பட்டுள்ளது.. இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் பிறந்த நாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது நினைவைப் போற்றும் விதமாக சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,”அட்டல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கு ஜனநாயகம்தான் முக்கியம். அதற்காக அவர் ஜனசங்கத்தை துவக்கினார். ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டபோது, ஜனதா கட்சிக்கு அவருடன் சேர்ந்து பலரும் சென்றனர். ஆட்சி அல்லது கொள்கையை நிலைநாட்டுதல் என இரண்டு தேர்வுகள் இருந்த நேரத்தில், ஜனதா கட்சியை விட்டு விலகி, பாஜக வை உருவாக்கினார்” என்று தெரிவித்தார்.