திருப்பதி லட்டுகள் : இனி அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு! – AanthaiReporter.Com

திருப்பதி லட்டுகள் : இனி அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு!

திருப்பதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்து  இருப்பதால்  தேவஸ்தானம் போர்டு லட்டு வழங்க பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அட்டைப் பெட்டிகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. தினமும் ஏறக்குறைய 5 லட்சம் லட்டுகள் விற்பனையாவதால், அதற்கு 1 இலட்சம் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்ம சென்னையில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் போகக் கூடிய தூரத்தில் உள்ள திருப்பதி கோயிலில் ஏழுமலையான் வெங்கடாஜலபதிக்கு நைவேத்தியப் பிரசாதமாகப் படைக்கப் படும் லட்டு, இதை `ஸ்ரீவாரி லட்டு’ என்றும் சொல்வார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டுதான் இதைத் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. திருமலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் பெருமாளின் `லட்டு பொட்டு’ என்கிற சமையற்கூடத்தில்தான் இதைத் தயாரிக்கிறார்கள். இந்த திருப்பதியில்  `அஸ்தானம்’, `கல்யாணோத்சவம்’, `புரோக்தம்’ என மூன்று வகையான லட்டு கள் தயாரிக்கப் படுகின்றன. அஸ்தானம் வகை விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுவது, இதன் எடை சுமார் 750 கிராம். இது நம் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளி நாடுகளில் இருந்து வரும் தலைவர் களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பதியில் நிகழும் பெருமாளுக் கான பிரத்யேக கொண்டாட்டங் களான கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவா ஆகியவற்றின் ஒரு பகுதிதான் கல்யாணோத்சவ லட்டு. சற்று பெரிய அளவிலான இதற்கு எப்போதும் பக்தர்களிடையே டிமாண்ட் உண்டு. `புரோக்தம்’ பக்தர்களுக்கு வழங்கப்படுவது. 175 கிராம் எடை கொண்டது.

ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. தரிசனம் செய்பவர் களுக்கு இலவசமாக ஒரு சிறிய லட்டு தரப்படும். மேற்கொண்டு வாங்கும் (ஒருவருக்கு இரண்டு – சீசனுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்) லட்டுகளுக்கு பணம் செலுத்தி, டோக்கன் வாங்கி, வரிசையில் நின்று வாங்க வேண்டும். 2017-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 14 கோடிக்கும் அதிகமான லட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

இப்படி புகழ்பெற்ற லட்டுகள் இது நாள் வரை பிளாஸ்டிக் பைகளில்தான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கம் விரைவில் மாறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, லட்டு களை விநியோகிப்பதற்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித அட்டைப் பெட்டிகளை பயன் படுத்த திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள் போன்றவற்றின் மீதான தடை திருப்பதி நகரத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. எனினும், திருமலையில் பிளாஸ்டிக்கை தடை செய்ய இன்னும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், துணிப் பைகள் என பல்வேறு பொருட்களில் லட்டுகளை விநியோகிக்க ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், பேக்கரிகள், இனிப்பகங்களில் வழங்கப் படுவது போன்ற காகித அட்டைப்பெட்டிகளில் லட்டுகளை வழங்குவது சரியானதாக இருக்கும் என்று திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டிருந்தது. ஸ்ரீசைலம் தேவஸ்தானத்தில் காகித அட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிந்தபின்னர் முதலில் திருமலையிலும், பின்னர் திருச்சானூர் உள்ளிட்ட உள்ளூர் கோவில்களிலும் காகித அட்டைப்பெட்டிகளில் லட்டுகளை வழங்க திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள்.