விளம்பரத்துக்காகவே பொது நல வழக்கு தொடர்வது பேஷனாகிப் போச்சு!- சுப்ரீம் கோர்ட் அப்செட்! – AanthaiReporter.Com

விளம்பரத்துக்காகவே பொது நல வழக்கு தொடர்வது பேஷனாகிப் போச்சு!- சுப்ரீம் கோர்ட் அப்செட்!

ஊடகங்களில் தலைப்பு செய்திகளை பார்த்து பொதுநல வழக்கு தொடருவது பேஷன் ஆகி விட்டது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த பத்து நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும், நிரவ்மோடியை 2மாதத்துக்குள் இந்தியா கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள், வினீத் தண்டா, ஏ.எல். சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிடுகையில், ‘நிரவ் மோடி, முகுல் சோக்சி மீதான மோசடி புகார் தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே தனியாக ஒரு புலனாய்வுக்குழு விசாரணை தேவையற்றது. இதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது’ என்றார்.

இதையடுத்து ஊடகங்களில் வருகிற தலைப்புச் செய்திகளை படித்து விட்டு பொது நல வழக்குகள் தொடர்வது பேஷன் ஆகி விட்டது. விளம்பரத்துக்காகவே இப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படுவதும் தெளிவாக தெரிகிறது. இந்தப் போக்கு கண்டிக்த்தக்கது. நிரவ் மோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவரும்போது, புதிதாக தனி புலனாய்வுப்படை விசாரணை கோருவது சரியல்ல. இங்கு சட்ட பிரச்னைகளைத் தான் பேச வேண்டுமே தவிர, உணர்ச்சிகரமாக பேசுகிற பேச்சுகளுக்கு எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்து வருகின்றன. அரசு தனது கடமையை செய்யட்டும்.. விசாரணை நடத்த விடுங்கள் என்று கூறி இவற்றின் மீதான விசாரணையை மார்ச் மாதம் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.