பிச்சுவாகத்தி ஆடியோ விழா ஹைலைட்ஸ்! – AanthaiReporter.Com

பிச்சுவாகத்தி ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிச்சுவாகத்தி. ஐய்யப்பன் இயக்கியுள்ள இப் படத்தில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளி வெங்கட், ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைதுள்ள இப்படத்துக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், அன்பழகன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

1

இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பாரத்தப்போது உடனே படம் இயக்க வேண்டும் என்ற உற்சாகம் வந்தது. மண்வாசனை கலந்த படங்கள் இப்போது அதிகமாக வருவதில்லை. ஆனால் இந்த படத்தை மண்வாசனை கலந்த படமாக இயக்கியிருக்கிறார் ஐயப்பன். அவருக்கும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

’பிச்சுவாகத்தி’ குறித்து இயக்குனர் ஐயப்பன் பேசும்போது, ‘‘தாங்கள் செய்த சிறிய தவறுக்காக தங்களாகவே தண்டனைக்காக சரணடையும் நண்பர்களை தறுதலைகளாக்கி, சமூகவிரோதிகளாக்கி விடும் காவல் நிலையம், அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் ‘பிச்சுவாகத்தி’ படம். இந்த படத்தை இயக்க வாய்ப்பு தந்த மாதையன் சார், மற்றும் இந்த படத்தில் என்னுடன் ஒத்துழைத்து பணியாற்றிய அத்தனை பேருக்கும் என் நன்றிகள்’’ என்றார்.

விழாவில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும் போது, “அறிமுக இயக்குனர்களை நம்பி தயாரிப்பாளர்கள் வருவது சாதாரண விசய மல்ல. அந்தவகையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இயக்குனர் ஐயப்பனை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன். இந்த பட டைரக்டர் ஐயப்பன் சுந்தர்.சியின் உதவியாளர். அதனால் காமெடியாக படத்தை பண்ணியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் டிரெய்லரைப்பார்த்தால் படம் வேறுமாதிரியாக இருக்கும்போல் தெரிகிறது. நல்ல கதையம்சமுள்ள வீரியமான கதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா தமிழ்நாட்டு பெண். தமிழ்ப்படங்களுக்கு கேரளா, ஆந்திராவில் இருந்துதான் நடிகைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவர் தமிழ்ப்பெண். நம்ம தமிழ்ப்பெண்கள் நடிக்க வருவதே கஷ்டம். காரணம், சினிமாவில் ஒழுக்க மீறல்கள் இருக்குமோ என்கிற பயம்தான். ஆனால் இப்போதைய சினிமாவில் அப்படியெல்லாம் இல்லை. தொழில் நேர்த்தியுடன்தான் அனைவரும் வருகிறார்கள். நல்ல நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள். அதனால் ஸ்ரீபிரியங்கா மாதிரி தமிழ் நடிகைகள் துணிந்து சினிமாவுக்கு வரவேண்டும். சினேகா, தன்ஷிகா வரிசையில் ஸ்ரீபிரியங்காவும் ஒரு புகழ் வாய்ந்த நடிகையாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

2

அடுத்து, பட நாயகன் இனிகோ பிரபாகரன். நான் இயக்கிய சுந்தரபாண்டியன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் இவர்தான். அவருக்குத்தான் நான் கதை பண்ணியிருந்தேன். அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்பில் இருந்தபோது சுசீந்திரனிடம் நான் உதவியாளராக ஒர்க் பண்ணினேன். அப்போது அந்த படத்தில் இனிகோ பிரபாகர் நடித்தபோது அவரிடம் சுந்தரபாண்டியன் கதையைப்பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அவரும் இந்த கதையில் நடிக்க வெறியுடன் இருந்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறாததால் அவரை வைத்து இயக்க முடியவில்லை. அப்போது சசிகுமார் அழைத்ததால் அந்த கதையை அவரிடம் சொல்லி ஓகே செய்தேன். அதனால் இப்போது நடித்துள்ள பிச்சுவாகத்தி படம் இனிகோ பிரபாகருக்கு இன்னொரு சுந்தரபாண்டியனாக இருக்கும் என நம்புகிறேன்.

unnamed

இந்த வருடத்தின் துவக்கத்தில் வீரய்யன் படத்தோட ஆடியோ விழாவுக்கு போயிருந்தேன். அந்த படத்திலும் இனிகோதான் நாயகன். அந்த வீரய்யன் கையில் இந்த பிச்சுவாகத்தி கிடைச்சிருக்கு. நிச்சயமாக பெரிய வெற்றி அடைவார். இந்த படத்தின் ட்ரெய்லரில் இனிகோவின் கண்ணில் ஒரு வெறி உள்ளது. அது இந்த முறை நான் ஜெயிச்சிருவேன் என்று சொல்வது போல் உள்ளது. இப்போது தான் அவர் சரியாக ஓட ஆரம்பித்துள்ளார் என் நினைக்கிறேன். இந்த படம் இனிகோவுக்கு மிகப்பெரிய ஒரு அடையாளமாக மாறும்” என்றார்.