ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை – AanthaiReporter.Com

ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

நாட்டிலுள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை அப்டேட் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி , “நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும். பிற பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செயல்பாடுகள் வழக்கம்போல் நடைபெறும். வங்கிகளின் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக நாளை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண மாற்றம் செய்வதற்கு மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு 40 சதவீதம் கூட்டம் குறைந்துள்ளது”என்று அவர் கூறினார்.

note nov 18

இதனிடையே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நான்கு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மக்கள் பணத்தை தேடி அலைகின்றனர், மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படுவதே பிரச்சினையின் தீவிரத்தையும் பரிமாணத்தையும் அறிவுறுத்துவதாக உள்ளது” என்றார் டி.எஸ்.தாக்குர். மேலும், “மக்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர், நாங்கள் மக்கள் கதவுகளை அடைக்க முடியாது” என்று அரசின் மனுவுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினை அவ்வளவு சாதாரணமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இது மிகுந்த பரிசீலனைக் குரியது. மக்கள் பணத்திற்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவிக்க, அதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, “இது முற்றிலும் தவறு, மக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமர்வு, “இல்லை! மக்கள் அல்லல்படுகின்றனர், இதனை ஒருவரும் மறுக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவிப்புக்குப் பிறகு 47 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவே என்றார்.

இதற்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, “மக்கள் மீது அக்கறை இல்லையெனில் நாங்கள் மணிக்கொருதரம், நாளுக்கொருதரம் அறிவிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருப்போமா. வரிசையின் நீளம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது” என்றார்.

இதற்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அரசிடம் போதுமான பணம் இல்லையா என்ற தொனியில், “ரூ.100 நோட்டுகள் தட்டுப்பாடா? அந்த நோட்டுகள் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்படவில்லையே. ஏன் நூறு ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாறு செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ரொஹாட்கி கூறும்போது, “ஆம். ரூ.100 நோட்டுகள் போதுமான அளவில் இல்லை. ஏனெனில் நவம்பர் 8 அறிவிப்புக்கு முன்பு தற்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளே மொத்த பணப்புழக்கத்தில் 80% இருந்து வந்தது” என்றார். அவர் மேலும் தெரிவிக்கும் போது பணத்தட்டுப்பாடு இல்லை, நாடு முழுதும் தபால் நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகளை கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை என்று கூறினார்.

இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பணமாற்று வரம்பை ரூ.4,500-லிருந்து ரூ.2000 ஆக குறைக்கப்பட்டது ஏன்? சாமானிய மக்களின் கடினப்பாடுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ள போதும் வரம்பு குறைக்கப்பட்டது எப்படி?” என்றார்.

இதற்கு ரொஹாட்கி, பெட்ரோல் நிலையங்களில் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமணங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதற்கு குறுக்கிட்ட கபில் சிபல், “மெர்சிடஸ் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் நிலையங்களில் கார்டை தேய்க்கலாம், விவசாயிகள் செய்ய முடியாது. நாட்டு மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மாதமொன்றுக்கு ரூ.10,000-த்துக்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இது கறுப்புப் பணம் அல்ல. ஒரு குடும்பமே 20 கிமீ நடந்து சென்று பஸ்தாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் மாற்ற செல்கிறது. 23 லட்சம் கோடி நோட்டுகளில் சுமார் 14 லட்சம் கோடி நோட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, மீதி 9 லட்சம் கோடி நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன” என்றார்.

இதனையடுத்து மத்திய அரசும், கபில் சிபலும் நவம்பர் 25-ம் தேதியன்று ரூபாய் நோட்டு நடவடிக்கைகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் உண்மை நிலவரங்களையும், அடிப்படையான கடினப்பாடுகளையும் தரவுகளுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டு விசாரணையை தள்ளி வைத்தார்.