பாராளுமன்ற வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் நடைபெற்ற ஆகச் சிறந்த கூட்டத் தொடர்!

பாராளுமன்ற வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் நடைபெற்ற ஆகச் சிறந்த கூட்டத் தொடர்!

பாராளுமன்றத்தில் “அமளி!” “கூச்சல் குழப்பம்!” “முடங்கியது!” “மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது ” என்பவற்றையே சொல்லி வரும் தொலைக்காட்சிகள் சொல்ல மறந்த ஒரு நற்செய்தி: அண்மையில் (ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை) முடிவடைந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் மிக ஆக்கபூர்வமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. ஆம்..கடந்த 13 வருடங்களில் நடைபெற்ற ஆகச் சிறந்த கூட்டத் தொடர் இது.

அரசியல் கோணத்தில் ஆளும் தரப்பிற்கு இரு வெற்றிகள்

1. மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது.

2. மாநிலங்க்களவைத் துணைத் தேர்தலில் கிடைத்த வெற்றி

அவையில் உறுப்பினராக இல்லாத, எந்த மாநிலத்தின் முதல்வராகவும் இல்லாத கருணா நிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நாள் அலுவல்களை ஒத்திப்போட்டது இன்னொரு சிறப்பு.

18 அமர்வுகளில் 20 சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில என் பார்வையில் முக்கியமானவை. சமூகத்தில் மெளனமாகத் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. அவை:

1 பனிரெண்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்வோருக்கு மரணதண்டனை பெண்களை வன்புணர்வு செய்வோருக்குக் குறைந்த பட்ச தண்டனை ஏழாண்டுகள் என்றிருந்ததை 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ள சட்டம்

2 நூறு கோ ரூபாய்க்கு மேல் வங்கி மோசடி போன்ற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் சட்டம்

3. பட்டியல் இனத்தவர் மீதான வன்கொடுமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன் ஆரம்ப நிலை விசாரணைக்கு அவசியமில்லை, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முன் அனுமதி பெறத் தேவையில்லை என்பன முக்கியமான திருத்தங்கள்

4. பிற்பட்ட வகுப்பினரின் தேசிய ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்ட நிறுவனம் என்ற தகுதியை அளிக்கும் 123 வது அரசமைப்புச் சட்ட திருத்தம்

5 லஞ்சம் கொடுப்போரையும் தண்டிக்கும் சட்டத் திருத்தம்

6. திவால் ஆகும் நிறுவனங்கள் கடன் கொடுக்க வேண்டியோர் பட்டியலில் வீடு /நிலம் வாங்கப் பணம் செலுத்தியவர்களையும் சேர்க்க வகை செய்யும் சட்டத் திருத்தம்

7 வணிக ரீதியான தாவாக்களுக்கு மாவட்ட அளவில் நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுகளை வற்புறுத்தும் சட்டத் திருத்தம். முன்பு ஒரு கோடிக்கு மேற்பட்டவையே வணிக ரீதியான தாவாவாகக் கருதப்பட்டது (Commercial disputes) இப்போது அந்த வரம்பு 3 லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது

8.சொத்துக்களைக் கையகப்படுத்தும் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் : கையகப்படுத்தும் சொத்துக்களின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர் தரப்பைக் கேட்க வகை செய்யும் சட்டத் திருத்தம்

இப்படிப் பல.

அனால் இவை குறித்து தொலைக்காட்சியிலோ, பேஸ்புக்கிலோ பெரிய அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை

நமக்குத்தான் பாசிச அரசின் சர்வாதிகார செயல்களைப் பற்றி எழுத,பேசவே நேரம் போதவில்லையே!

மாலன் நாராயணன்

error: Content is protected !!