பரியேறும் பெருமாள் – விமர்சனம்!

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!

சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி சமூக அவலங்களை வெளிச்ச மிட்டுக் காட்டும் காலக் கண்ணாடி என்பதை வெகு சிலர் உணர்ந்து, உணரவும் வைத்திருக்கிறார் கள். அந்த வகையில் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ நம் நாட்டின் இன்னொரு அகோர முகத்தை அப்பட்டமாக காட்டி கலங்கடிக் கிறது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்; ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் முதல் படம் இது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மாணவன், சட்டக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு உயர் சமூக மாணவியுடன் ஏற்படும் சாதாரண நட்பால், ஏற்படும் பிரச்னைகளும், சவால்களும் என்னவென்பது தான் படத்தின் கதை.

தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரையிலான கிராமங்களில் இன்று கூட உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதனால் இளம் தலை முறையினர் படிக்கும் பள்ளி, கல்லூரி என மாணவ மாணவிகள் அன்றாடம் சந்திக்கும் கஷ்டங்களையும் அவமானங்களையும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர். எடுத்துக் கொண்டதென்னவோ இரண்டு ஜாதிகளுக்கிடையேயான புரிதலற்ற சங்கடமான பிரச்னை தான் என்றாலும் இரு தரப்பினரின் மன நிலை எப்படி இருக்கும், அவர்களையும் மாற்றியது எது?, எதை மாற்றினால் ம் அவர்களும் மாறக் கூடும் என்பதை சகல தரப்பினரும் புரியும் வகையில் சொல்லி இந்த படத்தை சகல சமூகத்திற்கான ஒரு படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதிலும் படம் கொஞ்சம் சோகம் மற்றும் கருத்து சொல்லும் கந்தசாமித்தனமாக இருக்கு நினைத்தால் அது ரொம்பத் தப்பு. ஒரு சீரியஸான விஷயத்தை இப்படி கூட ரசிக்கும்படி கொடுத்துள்ள செல்வராஜின் பாணிக்கு தனி பூங்கொத்து.

கல்லூரி கலாட்டா, காமெடி என துவங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸாக மாறும் இப்படத்தின் நாயகன் “பரியேறும் பெருமாள் பி.ஏ,.பி.எல் மேல ஒரு கோடு” என்று அப்பாவித் தனமாக கல்லூரியில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் கதிர் தொடங்கி,தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்பதை உணராமல் அதே சமயம் தான் நினைத்ததை தைரியமாக பேசும் ஒரு பெண்ணாக ஆனந்தி, கல்லூரி மாணவன் போர்வையில் வந்து டைமிங் காமெடியால் தியேட்டரே அதிர வைக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும் யோகி பாபு, உயர் ஜாதி பெண்களை காதலிக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை கொலை செய்யும் வயதான மனிதர் வேடத்தில் நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ், இயக்குநர் மாரிமுத்து, கதிரின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் தங்கராஜ் என்று படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும் விதத்தில் அவர்களது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் நாயகன் வளர்த்த கருப்பி என்ற நாய்க்கு நடக்கும் கொடுமையைக் கண்ட போது திரையரங்கே அதிர்ச்சியாகி போனது.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இதம். படத்தின் பாடல்களும், அதன் வரிகளும் தனி கவனத்தை கொடுப்பதால் படத்தின் பாலான புரிதல் அதிகமாகிறது. கேமராமேன் ஸ்ரீதர் கிம்பல் தொழில்நுட்ப கேமரா மூலம் முதல்முறையாக எடுக்கப்பட்ட படம் இதுதானாம். ஒளிப்பதிவாளர் கிராம பகுதிகளை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்ட முடியுமா என ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலும் படத்தில் ஜாதி மற்றும் வன்முறையை மட்டும் பூதாகரமாக காட்டி கவலை யுற வைக்காமல நம்பிக்கை தரும் சூப்பர் கிளைமேக்ஸில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்த பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயம்

மார்க் 4 / 5

error: Content is protected !!