இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு! – AanthaiReporter.Com

இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

நம் ஆந்தையில் முன்னரே சொல்லியிருந்தது போல் நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கடந்த 2012-இல் வெளியான ஒரு சர்வதேச ஆய்வில் பின்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், யுனைட்டெட் கிங்டம், நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, ரஷியா ஆகிய நாடுகளே முதல் 20 இடங்களில் இருந்தன. கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு சர்வதேச ஆய்வில், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், பின்லாந்து, யு.கே., கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, போலந்து, டென்மார்க், ஜெர்மனி, ரஷியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல், பெல்ஜியம், செக் குடியரசு, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களைப் பெற்றுள்ளன. இதில் ஒரு ஆய்வில் இந்தியா 92-ஆவது இடத்திலும், மற்றொரு ஆய்வில் 105-ஆவது இடத்திலும் இடம் பெற்றிருந்த நிலையில் நம் இந்தியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரம்பப் பள்ளி படிப்பு முதல் இளநிலை பட்டப் படிப்பு வரைக்கும் குறைந்தபட்சம் 19,000 டாலர் (ரூ.12.2 லட்சம்) செலவு செய்கின்றனர். இந்தத் தொகையைத் திரட்ட அவர்கள் கடன் வாங்குவதில்லை, சிக்கனம், சேமிப்பு, ஆடம்பரச் செலவுகள் ரத்து, ஆகியவற்றோடு சொந்த சுகங்களைத் தியாகம் செய்து பணத்தைத் திரட்டுகிறார்கள் என்பது சமீபத்திய ஓர்  ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தையை ஆரம்பப் பள்ளியில் சேர்ப்பதிலிருந்து பட்டப் படிப்பை முடிக்கும் வரை படிப்பதற்கான புத்தகங்கள், பள்ளிக்கு போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு மற்றும் தனிப்பயிற்சிக்காக ரூ. 12.22 லட்சம் (அமெரிக்க டாலரில் 18,909) வரை இந்தியப் பெற்றோர்கள் செலவு செய்கின்றனர். பிரபலமான 15 நாடுகளில் குழந்தைகளின் படிப்பிற்காக செலவிடும் தொகை பற்றிய விவரங்களை இந்த ஆய்விற்காக திரட்டியுள்ளனர். செலவு தொகை அமெரிக்க டாலரில் கணக்கிடப்பட்டுள்ளது. ஹாங்காங் -1,32,161. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 99,378, சிங்கப்பூர் – 70,939. எகிப்து – 16,863, பிரான்ஸ் – 16,708 டாலர்களைச் செலவிடுகின்றன.குழந்தையின் படிப்பிற்காக பெற்றோர்கள் அதிகம் செலவிடும் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலகளாவிய வேலைக்கான போட்டி சந்தையில் இன்றைய சூழ்நிலையில் படிப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியின் மூலம் குழந்தையின் எதிர்கால வளமான வாழ்க்கைக்காகப் பெற்றோர்கள் தங்களின் வாழ்க்கை முறையிலும், பொருளாதாரத்திலும் பல தேவைகளைத் தியாகம் செய்கிறார்கள் என ஹெச்எஸ்பிசி வங்கி நடத்திய கல்வி மதிப்பு என்ற தலைப்பிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹெச்எஸ்பிசி வங்கியின் இந்திய பிரிவுத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 89 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பள்ளி படிப்புக்காக எந்த நேரத்திலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். 94 சதவீத பெற்றோர்கள் குழந்தையின் முதுநிலை பட்டப் படிப்பு வரைக்கும் செலவாகும் தொகையை தர தயாராக இருக்கி றார்கள். இந்த 94 சத வீதப் பெற்றோர்களில் 59 சதவீத பெற்றோர்கள் குழந்தையின் படிப்புக்கான செலவை தங்களது வருமானத்திலிருந்து கொடுக்கிறார்கள்.

48 சதவீத பெற்றோர்கள் சிறுசேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையிலிருந்து செலவிடுகிறார்கள். 30 சதவீத பெற்றோர் கள் பள்ளி படிப்புக்கென தனிச் சேமிப்பு மற்றும் தனிமுதலீட்டுத் திட்டம் ஆகியவற்றைத் திட்டமிட்டு அதிலிருந்து செலவிடுகிறார்கள். 44 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் படிப்பு செலவிற்காக தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய செலவைக்கூட செய்யாமல் மிச்சம் செய்கிறார்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பொழுது போக்குக்கு செலவிடும் தொகைகளையும் தியாகம் செய்து விடுகிறார்கள்.32 சதவீத பெற்றோர்கள் வழக்கமான வேலை நேரத்தைவிட மேலும் அதிக நேரம் உழைத்தும், பிற வேலைகளைச் செய்தும் பெறும் கூடுதல் வருமா னத்தை குழந்தைகளின் கல்விக்கு ஒதுக்கிறார்கள். இத்தகைய சேமிப்புகள் பிறரிடம் கடன் வாங்காமல் தங்கள் குழந்தையின் படிப்பு செலவை சமாளிக்க வகை செய்கிறது. இவ்வாறு, வேல்யூ ஆப் எஜுகேஜன் ஆய்வு தெரிவிக்கிறது.