சிறுமி பலாத்கார, கொலை: எதிர்ப்பை காட்ட மகளுடன் செய்தி வாசித்த பெண் பத்திரிகையாளர் – AanthaiReporter.Com

சிறுமி பலாத்கார, கொலை: எதிர்ப்பை காட்ட மகளுடன் செய்தி வாசித்த பெண் பத்திரிகையாளர்

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்துள்ளது. பத்திரிகையாளராக பணி புரியும் குறித்த தாய் செய்தி வாசிக்கும் போது தனது சிறிய மகளை மடியில் அமரவைத்துபடியே  இந்த செய்தியை வாசித்துள்ளார்.ஆம்.. 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சமா டிவியைச் சேர்ந்த கிரண் நாஸ் குறித்த செய்தியை வாசிக்கத் ஆரம்பித்தபோது, “நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை. நான் ஒரு தாய். 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

நடந்தது என்ன?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 5 ஆம் திகதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தி, நீதி கோரி மக்கள் தொடர்ந்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க பொலிஸார் தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. பொலிஸாரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, “போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்” என வேதனை தெரிவித்தார்.

எனினும், குறித்த வழக்கை பாக்கிஸ்தான் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 11 குழந்தைகள்
பஞ்சாப் மாகாணத்திலிருந்து இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 11 பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர் என அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டிருக்கின்றது. கடந்த ஆண்டில் மாத்திரம் 4139 சம்பவங்கள் நடந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.