ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு! – AanthaiReporter.Com

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு!

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 55 நாடுகளைக் கொண்ட ஆசியா பசிபிக் கூட்டமைப்பு, ஏக மனதாக இந்தியாவை தேர்வு செய்துள்ள நிலையில் இந்த உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளதுதான்  பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர் களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும். இந்நிலையில், வரும் 2021 – 22ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன் வந்துள்ளன.ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.  ஆசியா பசிபிக் நாடுகள் இந்தியாவை ஆதரித்திருப்பதற்கு ஐ.நா-வுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகும். ஏற்கனவே 7 முறை நிரந்தரமில்லா உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது