வாங்க பேசலாம் ! – பாக். பிரதமர் இம்ரான்கான் அழைப்பு! – AanthaiReporter.Com

வாங்க பேசலாம் ! – பாக். பிரதமர் இம்ரான்கான் அழைப்பு!

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து விட்டதாக சொன்ன நிலையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இத்தனைக்கும் இந்திய விமானப்படை பாகிஸ்தான் ராணுவத்தையோ மக்களையோ தாக்காமல் தீவிரவாதிகளின் முகாம்களை மட்டும் அழித்துவிட்டு திரும்பியது என்ற தகவல் வந்தது. ஆனால் அதை மறுக்கும் பாகிஸ்தானோ, இந்திய ராணுவத்தை தாக்க முயற்சிப்பதால் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதுடன் இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக இரு நாடுகளுக்கிடையேயான வான்வழியிலும் போர் விமானங்கள் ஒன்றை ஒன்று தாக்கி கொண்டதால் இன்று அந்த பதற்றம் உச்சத்தை அடைந்து உள்ளது. இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் இரு நாடுகளும் உட்கார்ந்து அமைதியாக பேசினால் தானாகவே பிரச்சனை தீர்ந்து விடும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார். தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனவே மோதல் போக்கை கைவிட்டு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக கூறினார். வரலாற்றில் ஏற்பட்ட போர்கள் அனைத்தும் தவறான அனுமானங்களால் உருவானவை. போரை தொடங்குபவர்களுக்கு தெரியாது அது எப்போது முடியும் என்று. எனவே மோதல் போக்கை நீட்டித்து அதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் போரை முடிப்பதென்பது இருநாட்டு அரசின் கட்டுப் பாட்டில் இருக்காது என குறிப்பிட்டார். இரு நாடுகளிடமுமே ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அதனை தற்போது பயன்படுத்துவதால் என்ன நிகழும் என வினவிய அவர், இந்த உலகம் பல போர்களையும் அதனால் ஏற்பட்ட அழிவு களையும், இழப்புகளையும் பார்த்துள்ளது என்றார்.

“முதல் உலகப் போர் ஒரு வாரத்திற்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் 6 ஆண்டுகள் நீடித்தது. அதைப் போலவே பயங்கரவாதத்தின் மீதான போர் 17 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டும். நான் இந்தியாவிடம் கேட்கிறேன். உங்களிடம் ஆயுதங்கள் உள்ளன. எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன. நாம் ஒரு தவறான மதிப்பைப் பெற வேண்டுமா? இது மேலும் வளருமென்றால், அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ அல்லது மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. புல்வாமா தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் துக்கத்தை நாங்கள் உணர்கிறோம். அதற்காக உரிய விசாரணையையும் பேச்சுவார்த்தையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சினை தீவிரம் அடைந்தால் இருநாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும், நம்முடைய கணக்குகள் தவறாகிவிட்டால் கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும், அதை நாம் அனுமதிக்கலாமா. இந்த சூழலில் இருநாடுகளும் விவேகத்துடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்துவதே சரியாக இருக்கும். இதையொட்டி இந்திய பிரதமர் மோடியை வரவேற்று விருந்தளிக்க தயாராக உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் எனவே பேச்சு நடத்த வருமாறும் இந்தியாவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.