பத்ம விருதுகள்: ஜனாதிபதி இன்று வழங்கினார்! – AanthaiReporter.Com

பத்ம விருதுகள்: ஜனாதிபதி இன்று வழங்கினார்!

சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு இந்திய குடியரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். இதன்படி இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு இவ்விருத்துக‌ளை பெறும் மோகன்லால், பிரபுதேவா, சங்கர் மகாதேவன், பங்காரு அடிகளார், சரத் கமல் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான ஜனவரி 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.

கேரளத்தைச் சேர்ந்த நடிகர் மோகன் லால், விண்வெளித் துறை விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் உத்தரகண்டைச் சேர்ந்த பச்சேந்திரி பால், பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வி. ரமணி, இசைக் கலைஞர் “டிரம்ஸ்’ சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். முன்னாள் வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோரும் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல்கட்டமாக இன்று 56 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஷ்டிரபதி பவனில் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில், மோகன்லால், பிரபுதேவா, பங்காரு அடிகளார், சரத் கமல், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் இன்று குடியரசு தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளை பெற்றனர்.