தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு எதிராக மொத்தம் 321 வழக்குகள்! – AanthaiReporter.Com

தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு எதிராக மொத்தம் 321 வழக்குகள்!

தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு எதிராக மொத்தம் 321 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று  எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரிவாக விசாரிக்க உத்தரவிட கோரிய வழக்கில், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 4,000 குற்ற வழக்குகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மீது 4,122 குற்ற வழக்குகள் நிலுவை யில் இருப்பதாகவும், இவற்றில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப் பட்டுள்ளதாகவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய மனுவை இன்று (டிசம்பர் 4)  தலைமை நீதிபதியான ரஞ்சன் கொகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய விவரங்களை அரசிடமிருந்தும், பல்வேறு உயர்நீதிமன்றங்களிடமும் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. இவ்விவரங்களின் அடிப்படையில் வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க போதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் சுப்ரீம் கோர்ட் திட்டமிட்டுள்ளது.

வழக்கறிஞரான அஷ்வினி உபத்யாய் தொடுத்துள்ள இந்தப் பொதுநல வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. மேலும், மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் குற்றத்தில் ஈடுபடும்போது அவ்வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியல்வாதிகள் மீது வாழ்நாள் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.