இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை? – மோடிக்கு 1061 டாக்டர்கள் சிபாரிசு – AanthaiReporter.Com

இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை? – மோடிக்கு 1061 டாக்டர்கள் சிபாரிசு

உலகின் பல நாடுகளில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய அரசும், தமிழக அரசும் இதற்கு தடை விதித்துள்ள நிலையிலும் இந்தியாவின் பல்வேறு மாநில இளைஞர்கள் மத்தியில் இ–சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் மீதான மோகம் அதிகரித்து உள்ளது. இதனால் இதன் விற்பனைக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தர விட்டது. இருப்பினும் சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகளை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,061 டாக்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த டாக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பொது இடங்களான ‘பூங்கா, கடற்கரை, திரையரங்கு, சந்தை, சாலைகள் போன்ற பொதுஇடங்களில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று இ-சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இப்படியான ஈர்ப்பு அழைப்பில் மயங்கி, பலரும் இ-சிகரெட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆனால், இந்தியாவுக் குள் நுழைந்துள்ள புதிய புற்றுநோய் பூதம்தான் இ-சிகரெட் என்பதை நம்மில் பலர் இன்னமும் உணரவில்லை.

2014-ல் ‘புகையிலை சிகரெட்டுக்கு மாற்று’ என்ற போர்வையில் புகுந்துள்ள இ-சிகரெட் புகைப்பழக்கம், இந்தியா உள்ளிட்ட 182 நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இ-சிகரெட் புகைப்பதாகப் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இந்தப் புதிய பாணி புகைப்பழக்கம் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் மிக அதிக அளவில் பரவியுள்ளது.

மேலும் சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகள், இ–ஹூக்கா போன்றவற்றை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.இ-சிகரெட் எந்தவகையிலும் பாரம்பரிய சிகரெட்டுக்கு மாற்று இல்லை என்று மறுக்கிறது மருத்துவ உலகம். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட்டைப் புகைக்கும்போது நிகோடின், தார், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமான நச்சுப்பொருட்கள் உடலுக்குள் செல்கின்றன. இ-சிகரெட்டில் நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால், இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர். மேலும், இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்று விளம்பரம் செய்கின்றனர். அது உண்மையல்ல. உடலில் புற்றுநோயை உண்டாக்க நிகோடின் ஒன்றே போதும். இது சிகரெட் எனும் நேர் வழியில் வந்தாலும் சரி, இ-சிகரெட் எனும் புற வழியில் வந்தாலும் சரி, இரண்டும் ஒன்றுதான்.
ஒரே நேரத்தில் 30மி.கி. முதல் 60 மி.கி. வரையிலான நிகோடினை ஒருவர் எடுத்துக்கொண்டால், உடனடியாக மரணமே நிகழ வாய்ப்புள்ளது. இ-சிகரெட்டில் 16 மி.கி.வரை நிகோட்டின் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்கின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள். ஆக இது மக்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினையாகும். இ சிகரெட்கள் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பது. எனவே, அதற்கு நிரந்தர தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.