நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

ப்போதெல்லாம் சர்வதேச நாடுகள் அத்தனையுமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறம், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்கள் போன்றவை அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்கும் விதத்தில் இருப்பதையும் காணலாம்.

edit aug 15

இப்படி ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு கொடியைத் சின்னமாகத் தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பித்தது. எப்பொழுது தெரியுமா? பைபிள் காலத்திற்கும் முன்னதாகவே இந்தப் பழக்கம் உலகத்தில் இருந்து வந்திருக்கிறதாம். ஆனாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தேசியக்கொடி தோன்றியது ஒரு சுவையான கதையாகும். பண்டைக் காலத்தில் தோன்றிய தேசியக் கொடிகள் துணியில் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஒரு கம்பத்தின் மீது மரத்தினால் ஏதாவதொரு பொருள் அல்லது பறவை அல்லது விலங்கினத்தின் உருவத்தைச் செதுக்கி வைத்து விடுவார்கள். உலகத்தில் தோன்றிய முதல் கொடி இப்படி மரக்கொடியாகத்தான் தோன்றியது. அதுவும் ஓர் அவசியத்தை முன்னிட்டுத்தான் தோன்றியது. அதாவது இரண்டு நாடுகள் போரிடும்பொழுது இருநாட்டுப் படைகளும் நேர் எதிர்த்திசைகளிலிருந்து புறப்பட்டு ஒரு பொது இடத்திற்குச் சென்று சங்கு அல்லது ஏதாவதொரு ஒலிப்பானை ஒலிக்கச் செய்துவிட்டு போரிடத் தொடங்குவதுதான் பண்டைக் காலத்திய வழக்கமாகும்.

அப்படிப் போருக்குச் செல்லும் ஒரு நாடு அல்லது குழுவின் வீரர்கள் ஒரே அணியாகச் செல்லவும், அடையாளம் கண்டு கொள்ளவும்தான் இப்படிப்பட்ட மரக்கொடிகளைத் தயார் செய்து பயன்படுத்தினார்கள். போர்க்களத்தில் போர் நடக்கும்பொழுது இந்த மரக்கொடிகளை வெட்டிச் சாய்ப்பதையே இருதரப்பு வீரர்களும் முதல் பணியாகக் கருதி முயற்சிப்பார்கள். ஒவ்வொர் தரப்பினரும் தங்கள் கொடி சாய்ந்துவிட்டால் அவர்களுடைய அரசன் அல்லது படைத்தலைவனே சாய்ந்து விட்டதாக அவர்கள் கருதியதுதாம் இதற்குக் காரணமாகும். துணியினால் ஆன முதல் கொடியை ரோமானிய நாட்டவர்தான் முதன் முதலாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக ஒரு வரலாறு கூறுகிறது.

பண்டைய ரோமானியர்கள் போர்க்களத்தில் வண்ணத்துணிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்துவிடுவார்கள். அந்த இடத்திற்கு அவர்களுடைய படைவீரர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, எதிரிநாட்டுப் படைகள் வந்து சேர்ந்ததும் போர் குழப்பமில்லாமல் நடக்கும். யூதர்கள் ஒரு தனிக்கொடியைப் பயன்படுத்தியதாகப் பைபிளிலேயே ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் கி.பி. 1218-ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதைத் தேசியச் சின்னமாக ஏற்று முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்தான்.

அடுத்து 1339 ஆம் ஆண்டில் ஸ்விட்ஸர்லாந்து நாடும் தன்னுடைய தேசியச் சின்னமாக ஒரு கொடியை அமைத்துக் கொண்டது. அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துத் தான் பிரிட்டன் தன் தேசியக் கொடியை அமைத்துக் கொண்டது. யூனியன் அமெரிக்கத் தேசியக் கொடி தோன்றியது. அமெரிக்காவின் கொடியில் அதன் 50 மாநிலங்களையும் குறிக்கும் வகையில் 50 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன! பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவைப் பின்பற்றிப் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொடிகளை அமைத்துக் கொண்டன.

உலகத்தின் மிகப்பழமையான கொடி ஏதாவது உள்ளதா என்று தேடியபோது 1972ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள கபிளில் என்ற ஊரில் ஒரு பழமையான கொடி கிடைத்தது. உலோகத்தால் செய்யப்பட்ட அந்தக் கொடி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கொடியாகும் அது! ஆனால், உலகத்திலேயே மிகப்பெரிய கொடி ஒன்று 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. 411X210 சதுர அடி பரப்பளவும் 7.7 டன் எடையும் கொண்ட அந்தக் கருங்கல் கொடியை உருவாக்கியவர் லென் சில்வர் பைன் என்பவராவார், ஃதி கிரேட் அமெரிக்கன் ஃபிளாக்“ என அழைக்கப்படும் அந்தப் பிரமாண்டமான கொடியை அவர் அமெரிக்க ஜனாதிபதிக்குப் பரிசளித்தார்.

இன்று அந்தக் கொடி வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இருக்கிறது. உலகத்திலேயே கொடிக் கம்பங்களில் பறக்கும் கொடிகளில் மிகவும் பெரிய கொடி தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில் கொடி தான்! பிரெஸில் நாட்டின் தலைநகரான பிரேஸிலியாவில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியின் நீளம் 328 அடி 1 அங்குலம்; பெரிய பொடி சோவியத்யூனியன் உட்பட உலகின் எந்த நாட்டிலும் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் நமது கடவுள்களுக்குக் கூட தனித்தனிக் கொடிகள் உண்டு. உதாரணம்: முருகப் பெருமானின் சேவல் கொடி.

பண்டைத் தமிழ் மன்னர்களை எடுத்துக் கொண்டால் சேர மன்னர்களுக்கு வில் கொடியும், பாண்டிய மன்னர்களுக்கு மீன் கொடியும், சோழமன்னர்களுக்கு புலிக்கொடியும் இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் கொடிக்கு எப்பொழுதும் தனிமரியாதை உண்டு. அந்தக் கொடிக்கு அரசன் முதல் ஆண்டிவரை தலை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். ஒரு நாட்டின் கொடியை எவரேனும் அவமதித்தால், அது அந்த நாட்டையே அவமானப்படுத்துவதாகும். அந்தக் காலத்தில் அரசர்களின் தேர்களில் அவர்களுடைய நாட்டுக் கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தன. இந்தக் காலத்தில் நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் தேசியக்கொடிகள் கம்பீரமாகப் பறக்கின்றன. தேசியக் கொடியைப் பற்றி இந்திய தேசத்தின் தந்தை‘ யாகிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பவை வருமாறு: “எல்லா நாடுகளுக்கும் கொடி இருப்பது அவசியம். அதற்காக இலட்சக்கணக்கானோர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையான விக்கிரக ஆராதனை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இதை ஒழிப்பது பாவம். ஏனென்றால் ஓர் இலட்சியத்தின் சின்னமாகக் கொடி விளங்குகிறது. யூனியன் ஜாக் கொடியை ஏற்றிவைக்கும் போது ஆங்கிலேயரின் நெஞ்சத்தில் அளப்பரிய வலிமையுடன் உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றன. நட்சத்திரங்களும் பட்டைகளும் பொறித்த கொடியை ஓர் உலகத்துக்கே ஈடாகப் போற்றுகின்றனர் அமெரிக்கர்கள்.

நட்சத்திரத்துடன் கூடிய பிறைக் கொடியைக் கண்டால் இஸ்லாமியர்களுக்கு வீர உணர்வு பொங்கி எழும். இந்தியர்களாகிய நாம் இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்ஸிகள், இன்னும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மற்றவர்கள் ஒரு பொதுக் கொடியை தேசியக் கொடியாக வரித்துக் கொண்டு அதற்காக வாழவும், சாகவும் முன் வருவது அவசியம்“ என்கிறார் அண்ணல் அவர்கள் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் காந்தியடிகள் மட்டுமின்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரும், டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்ற தேசியத் தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சமயம் சுபாஷ் சந்திரபோஸ் அயல் நாடுகளிலிருந்து திரும்பி, பம்பாய் துறைமுகதத்தில் வந்து இறங்கியதும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது பத்திரிகை நிருபர் ஒருவர் சுபாஷ் பாபுவை நெருங்கி “நாட்டு மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் செய்திகள் என்ன?“ என்று கேட்டபோது அந்தத் தியாகத் தலைவன் சொன்ன ஒற்றை வரிச் செய்தி, “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!“ என்பதுதான்.

இந்நிலையில் நம் இந்திய தேசியக்கொடியில் உள்ள மூன்று வண்ணங்களின் அர்த்தம் என்ன என்பது இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை என்று தனியார் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களில் உள்ள 18 முதல் 23 வயதான இளைஞர்களிடையே தனியார் கல்வி நிறுவனம் ஒன்று ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதன் முடிவில், இந்திய தேசியக்கொடியில் உள்ள மூன்று வண்ணங்களின் அர்த்தம் என்ன என்பது இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களும் எதனைக் குறிக்கின்றன? என்று கேட்கப்பட்டதற்கு சென்னையில் 8% பேரும் பெங்களூரில் 12% பேரும் மும்பையில் 105 பேரும் மட்டுமே சரியான பதில் அளித்துள்ளனர்.

தேசிய கீதம் யாரால் எழுதப்பட்டது என்று கேட்டதற்கு சென்னையில் 28% பேரும் பெங்களூரில் 34% பேரும் மும்பையில் 42% பேரும் மட்டுமே சரியான பதிலளித்துள்ளனர். இதே கேள்வியை இரண்டு பதில்களைக் கொடுத்து சரியானதை தேர்வுசெய்யச் சொன்னபோதும் சென்னையில் 38% பேரும் பெங்களூரில் 49% பேரும் மும்பையில் 53% பேருமே சரியான பதிலை தேர்வுசெய்துள்ளனர் என்பது கொஞ்சம் சோகச் செய்திதான்.

Related Posts

error: Content is protected !!