பெரிய 420 – தினகரன் குறித்து ஓபிஎஸ்

பெரிய 420  – தினகரன் குறித்து ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயபேட்டை கட்சி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியிலிருந்து சிலரையும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து சிலரையும் விடுவித்துள்ளனர்.

அதிமுக தலைமை சார்பில் இரண்டு அறிக்கைகள் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்சியின் குறிக்கோள்களுக்கும், கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட தென்சென்னை வடக்கு மாவட்டச்செயலாளர் வி.பி. கலைராஜன், நெல்லை மாவட்டச்செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநிலச்செயலாளர் புகழேந்தி, கட்சி செய்தி தொடர்பு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணி துணைச் செயலாளர், கட்சி செய்தி தொடர்பு குழு உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்டச்செயலாளர்கள் வெற்றிவேல், பார்த்திபன், தங்கத்தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப் படவில்லை. இவர்கள் 4 பேரும் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக அதிமுக தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்த அவசர கூட்டம் நடத்திய ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் கூறியதாவது:

கட்சிக்கு என்னை கொண்டு வந்ததாக தினகரன் கூறுகிறார். ஆனால் அவர் வருவதற்கு 18 வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்தவன் நான். நான் 1980-ல் கட்சிக்கு வந்தவன் 18 வருடம் நான் சீனியர். அவர் என்னை அறிமுகப்படுத்தியதாக கூறுவது எவ்வளவு பெரிய பொய். தினகரனைப்பற்றி நீங்கள் அறிந்த அளவை விட எனக்கு அதிகம் தெரியும். அவர் ஒரு மாயமான், ராமாயணத்தில் மாயமானை நம்பிச்சென்றவர்கள் கதிதான் அவரை நம்பிச் செல்பவர்களுக்கும் ஏற்படும்.

அவரே அடிக்கடி சொல்வார் எனது ஒரு முகத்தைத்தான் பார்த்துள்ளீர்கள் எனக்கு இன்னொரு முகம் உண்டு அதை யாருக்கும் இப்போது காண்பிக்க மாட்டேன் விரைவில் காண்பீர்கள் என்பார். நான் ஒரு பெரிய 420 என்பது உங்களுக்கெல்லாம் தெரியாது என்பார். இது உண்மையான சத்தியவாக்கு.

தில்லுமுல்லு செய்து தேர்தலில் அவர் வெற்றிபெற்றுள்ளார். எங்களிடம் எந்த உட்கட்சிப்பூசலும் இல்லை. இந்தக்கட்சி ஒரு குடும்பம் போன்றது, அதில் டிடிவி தினகரன் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார்.

நிச்சயமாக கட்சிக்கு துரோகம் செய்தவர்களை அவர்கள் எந்த பொறுப்பிலிருந்தாலும், சாதாரண தொண்டர்களாக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை வரும். ஜெயலலிதா மீது உண்மையான பாசம், அன்பு, விசுவாசம் உள்ள எந்த உண்மையான அதிமுக தொண்டனும் இது போன்ற வீடியோவை வெளியிட மாட்டார்.

அன்று அப்போலோவில் ஜெயலலிதாவை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை, ஜெயலலிதாவுக்கு அப்படி என்ன பெரிய நோய், மருத்துவர்கள் பார்க்கிறார்கள், செவிலியர் பார்க்கிறார் நம்மை ஏன் தடுக்கிறார்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பார்க்கச்செல்வேன். ஆனால் அவரைப்பார்ப்பதால் தொற்று ஏற்படும் என்று கூறியுள்ளார்கள், அதனால் அனுமதிக்கவில்லை, ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள் என்பார்கள்.

நம்மால் ஜெயலலிதாவுக்கு தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படவேண்டாம், மருத்துவர்கள் சொல்லும் போது எதற்கு பார்க்க வேண்டும் என்று திரும்பி விடுவேன் நானோ, அமைச்சர்களோ ஒரு நாள் கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

error: Content is protected !!