தினகரனை சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு என் பதில்! – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்! – AanthaiReporter.Com

தினகரனை சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு என் பதில்! – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்!

அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் தினகரனை சந்தித்து மனம் விட்டு பேச வேண்டும் என்கிற எண்ணத்தில் எனக்கும் தினகரனுக்கும் பொதுவான நண்பர் நண்பர் வீட்டில் சந்தித்தது உண்மைதான் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன்  செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் செய்தது தவறு தான் என்று வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இச்செய்தி பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தனது மீதான குற்றச்சாட்டை குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  “நேற்றிலிருந்து தினகரன் ஒரு புதுப்பிரச்சினையை திட்டமிட்டு கிளப்பி வருகிறார். நேற்றுக்காலை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டம் ஒட்டுமொத்த எழுச்சியுடன் நடந்தது. அதை கேட்டு ஒரு குழப்பமான மனநிலைக்கு தினகரன் வந்துள்ளார்.

ஒருவாரம் முன்பு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு சமுதாயரீதியான கூட்டத்தில் கலந்துக்கொள்ள வைத்தார். அந்த கூட்டத்தில் தினகரன் பேசியதை இங்குச் சொல்கிறேன். கதிர் காமை நான் ரூ.50 கோடி தருகிறேன் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று கூப்பிட்டதாகவும் அந்த தியாகசீலர் கதிர்காமு மறுத்துவிட்டதாகவும் ஒரு பொய்யைக் கூறியுள்ளார். கதிர் காமு பேராசிரி யராக பணியாற்றி ஓய்வுப்பெற்று பின்னர் ஜெயலலிதாவால் வாய்ப்பளிக்கப் பட்டு பின்னர் எப்படி சட்டமன்ற உறுப்பினாரானார், யார் உதவியோடு வென்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதன்பின்னர் பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசோடு ஓபிஎஸ் கூட்டுச் சேர்ந்து எடப்பாடி தலைமையிலான அரசை கலைத்துவிட்டு முதல்வராக ஆசைப்படுகிறார் என்று சொல்லி யிருப்பதன் மூலம் அவர் மிகப்பெரிய குழப்பவாதியாக சேற்றைவாரி என்மீது தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கிறார்.

தினகரனுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் நல்லக்குடும்பத்தில் பிறந்தவன். எந்த கட்சியில் இருக்கிறேனோ அந்த கட்சியின் உண்மையான தொண்டனாக செயல்பட்டவன் என்று நேற்றைய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினேன். ‘நான் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆனபின்னர் அவர் முதல்வராக முயற்சிக்கிறார் என்று என்னிடம் சில அமைச்சர்கள் வந்து கூறி வேறு முடிவெடுக்க சொன்னபோது நான் அவ்வாறு செயல்படக்கூடாது என்று தடுத்து புத்தி சொல்லி அனுப்பினேன். நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராக ஆகியிருக்க முடியும்’ என்று பேசினேன். தொண்டர் கள் வரவேற்றார்கள். இதனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்ற தினகரன் தங்கத்தமிழ்ச்செல்வன் மூலம் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அந்த நேரம் நான் தர்மயுத்தம் நடத்தி தனியாக இருக்கிறேன். முதல்வராக எடப்பாடி இருக்கிறார். தினகரனுடன் அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினகரனை விட்டு வெளியே வந்துவிடுகின்றனர். அதன்பின்னர் இந்த ஆட்சி கூடிய விரைவில் கலைந்துவிடும் என்று தினகரன் தெரிவித்தார். தனக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி 36 எம்.எல்.ஏக்கள் வரை ஆதரவை காட்டினார்.

தர்மயுத்தத்தில் இருந்த எனக்கு அது பெரும் கவலையாக இருந்தது. இது இப்படியே போனால் எம்ஜிஆரால் ஆரம்பித்த கட்சி உடைந்து போய்விடுமே என்ற ஆதங்கத்தில் இருந்த நேரத்தில் என்னை தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வந்து சந்தித்தனர். நான் அவர் களிடம் சொன்னது கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுங்கள் என்னால் இந்த இயக்கத்துக்கு பாதிப்பு வராது என்றேன்.

அவர்களும் நீங்கள் தர்மயுத்தம் நடத்தியதே அந்த குடும்பத்தை எதிர்த்துதான் ஆகவே நாங்களும் அந்த முடிவுக்கு வந்துவிட்டோம் என்றனர். ஆகவே நாம் ஒன்றாக இணைந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று அன்று கூட்டாக முடிவெடுத்தோம்.

அப்போது நான் சொன்னேன் ஜெயலலிதா எனக்கு இரண்டுமுறை முதல்வர் வாய்ப்பு கொடுத்தார் கள் ஆகவே மூன்றாம் முறை எனக்கு வேண்டாம், கட்சியை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் என்னை அமைச்சராக இருக்கும்படி கேட்டுக்கொண்டதால் இன்றுவரை அதை ஏற்று நிற்கிறேன்.

இணைகிறோம் என்ற பேச்சுவார்த்தை நடந்தபோதே அவருடன் சென்ற 36 பேரில் அவர் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயல்கிறார் என்றவுடன் சடசடவென்று சரிந்து 18 ஆக குறைந்துபோனது. அதன் பின்னர் பொதுக்குழுவைக்கூட்டி முடிவெடுத்தோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர்  இணைத்து பொதுக்குழு கூட்டம் நடந்தது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் கள் ஆதரவளித்தனர். அவரிடம் உள்ள 110 பொதுக்குழு உறுப்பினர்கள் வரவில்லை.

இதுதான் கட்சியின் நிலைமை. அவர் எங்கு பார்த்தாலும் என்னிடம்தான் அதிக பலமிருக்கிறது என 18 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஒரு தரக்குறைவான அரசியலை நடத்தி வருகிறார். எங்கு பார்த்தாலும் பொய், பொய்யினா பொய் அவ்வளவு பொய் சொல்லிக்கொண்டே ஒரு புதிய நடைமுறையை கடைபிடித்து வருகிறார்.

நீங்கள் எல்லாம் ஆவலோடு எதிர்ப்பார்க்கிற கேள்வி தினகரனை நீங்கள் சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறேன். நான் தர்மயுத்தம் நடத்திய நேரத்தில் ஒருபக்கம் எடப்பாடி குழுவினர் தினகரன் தரப்பினர் மோதல், தினந்தோறும் இந்த ஆட்சி கவிழும் என அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கட்சி உடைந்துவிடுமோ என்கிற மன உளைச்சலில் நான் இருந்தேன்.

அப்போது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அவருக்கும் நண்பர் எனக்கும் நண்பர் அவரிடம் தினகரனை சந்தித்து மனம் விட்டு பேச வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த நண்பர் வீட்டில் சந்தித்தேன். அன்று அவர் ஏதோ மனம் திருந்தித்தான் சந்தித்து பேசுவார் என்று பார்த்தால் பேட்டியில் கூறியதை அவர் திரும்பச்சொன்னார். தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற கோரிக்கையில்தான் அவர் பேசினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அதனால் இவர் மாறவே இல்லை என நினைத்து நான் வந்துவிட்டேன். அது நடந்தது ஜூலை 12, 2017 அன்று. அதன்பிறகு கட்சி இணைந்தது ஆகஸ்டு 21 2017. இதுதான் நடந்த உண்மை. ஏதோ மிகப் பெரிய கொலைக்குற்றம் செய்தது போன்று ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றிப் பெற்றதுபோல் இந்த இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெற முயல்கிறார். அது நிச்சயம் நடக்காது.”

முதலில் அழைப்பு வந்து சென்றீர்களா?

அய்யோ அதை ஏன் கேகிறீர்கள், அரசியலை விட்டு ஒதுங்கப்போகிறேன் சந்திக்க வேண்டும், சந்திக்க வேண்டும் என்று பிரச்சினை. சரி அவர் என்னத்தான் சொல்லப்போகிறார் என்று கேட்கத்தான் போனேன். அரசியல் நாகரீகம் கருதி என்னுடன் இருந்தவர்கள் யாரிடமும் இதை சொல்லவில்லை.

ஆனால் அவர் நான் திரும்பி வந்த பின்னர், அவரிடமிருந்து வந்த காரணத்தால் மன விரக்தியில், இதைச் வெளியில் சொன்னால் எங்களுக்குள் குழப்பம் ஏற்படும் என்று அவர் நினைத்திருக்கிறார். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

உங்கள் சகோதரர் அவரைச் சந்தித்தாரா?

என்னுடைய சகோதரருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இடையில் இதை ஏற்பாடு செய்த நண்பர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றார். இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் என்று கூறிவிட்டுச் சென்றார். இதுவரை நான் ஒரு பொய்கூடச் சொன்னது கிடையாது.

இணைந்ததற்கு பின்னால் அவரை ஒருநாள்கூட சந்தித்ததே இல்லை. ஒரு குழப்பத்தை உண்டுப் பண்ணவும், எனக்கிருக்கிற நல்லப்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கொடியவர்களின் கூடாரம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் தினகரனை சந்திக்க முயற்சி செய்தீர்களா? இந்த அரசை கவிழ்க்க திட்டமிட்டீர்களா?

எனக்கு எதற்குங்க… நானே இந்த அரசில் ஒரு அங்கம். நான் துணை முதல்வர் நான் எதற்கு கவிழ்க்க போகிறேன். அந்த தேவையே இல்லையே. மூன்றுமுறை முதல்வராக இருந்துள்ளேன் அந்த திருப்தியே போதும்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் தர்மயுத்தத்தின்போது உங்களுடன் வந்தார்கள் அவர்களிடம் ஏன் இந்த உண்மையைச் சொல்லவில்லை?

மனம் திறந்து ஏதாவது நல்ல வார்த்தை சொல்வார் என்ற எண்ணத்தில்தான் நான் சந்தித்தேன் ஆனால் அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்தில் இருந்தார். அவர் மனம் திருந்தவில்லை. இந்த கட்சி ஜனநாயக முறைப்படி நடக்கும் என்கிற எண்ணம் துளிகூட இல்லை.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்தக்கட்சியை ஜனநாயக முறைப்படித்தான் நடத்தினார்கள். சாதாரண தொண்டன் முதலமைச்சராக வரமுடியுமா? நான் மூன்றுமுறை முதல்வர், இப்ப எடப்பாடி முதல்வர் மற்ற கட்சிகளில் அப்படி உண்டா? திமுகவில் பாருங்கள் கருணாநிதி மறைந்துவிட்டார் அவர் மகன் ஸ்டாலின் வந்துவிட்டார், மற்ற கட்சிகளிலும் அந்த நிலை. ஆனால் அதிமுக அப்படி அல்ல.

உங்கள் சகோதரரும், பையனும் டிடிவியை சந்தித்ததாக சொல்கிறார்களே?

அப்படி எல்லாம் இல்லை, நான் கேட்டேன். அவர்கள் மறுத்துவிட்டனர்.

பின்னர் ஏன் அவ்வாறு சொல்கிறார்?

பொதுவாக அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவுப்படுத்தவும், ஆட்சிக்கு தர்மச்சங்கடமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில்தான் அவர் செயல்படுகிறார்.

கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி கைதான் ஓங்கியுள்ளதா?

ஆட்சி நடைமுறையில் அனைவரையும் கலந்து பேசி நடக்கிறார். கட்சி விஷயத்திலும் அனைத்து மூத்த தலைவர்களையும் கலந்து நடக்கிறார். ஆனால் குழப்பம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அவர் அவ்வாறு செயல்படுகிறார்.

அமமுகவுடன் அதிமுகவை இணைப்பதற்காக தினகரன் தூது விட்டாரா?

தினகரன் தரப்பிலிருந்து தொடர்ந்து தங்கமணி வேலுமணியிடம் அதிமுகவில் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள், அல்லது நாங்கள் ஏழுபேர் விலகி வந்து சேர்ந்துவிடுகிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கூறினோம்.

டிஜிபி வீட்டில் ரெய்டு, அமைச்சர் வீட்டில் ரெய்டு போன்றவைகள் மூலம் கூட்டணிக்காக பாஜக உங்களை நெருக்குகிறதா?

சம்பந்தமில்லாத கேள்வி, அதை தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

சந்திப்பின் நோக்கம் என்ன? எவ்வளவு நேரம் நடந்தது?

அந்த சந்திப்பின் நோக்கம் ஒன்றுமில்லை, அவர் மனம் திருந்தி வருவார் என்று சந்திக்க சென்றேன். 15 நிமிடம் நடந்திருக்கும். ஆனால் அவர் மாறவில்லை.

தினகரன் மீது வழக்கு போடுவீர்களா?

அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத்தயாரில்லை. அது பொய்யான குற்றச்சாட்டு.