மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்?

மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்?

மதிப்பிற்குரிய திரு. சுப வீ ஐயா அவர்களுக்கு..

ஒரு தேடலுக்காய் தங்களின் முகநூல் பக்கம் வந்தேன். ஏன் என்பதை பிறகுச் சொல்கிறேன்.

உங்கள் பதிவில் “சீமான் தனக்கு, ‘400 கோடியில் பேரம் பேசினார்கள்’ என்பதைச் சொல்லி,…

“தேர்தல் ஆணையத்தில் முறையிட்டீர்களா? ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தீர்களா.? நீங்கள் அறிவும் மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உமைகளை வெளியிடவும் முன்வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் சத்தியத்தின் பிள்ளைகள் ஆயிற்றே!“ உண்மை அறியக் காத்திருக்கின்றோம்” என்ற வரலாற்றுப் பதிவை எழுதியுள்ளீர்கள்.

முந்தைய காலங்களில் கலைஞர், ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் பல்வேறு தரப்பில் அப்படி பேசியிருக்கின்றார்கள். அவர்களிடமும் அப்படியான கேள்வியை வீசுவீர்களா? எனத் தெரியாது. அது உங்கள் விவகாரம். சீமான் அசைவுகளுக்கு ஆடிக்கொண்டிருப்பது உங்கள் அரசியல். போகட்டும்.

‘அறிவும், மான உணர்ச்சியும்’ பெற்றவர் தாங்கள் என்பதாலேயே நான் தங்களின் முகநூல் பக்கத்திற்கு வந்து தேடினேன்.

இன்றைய நாள் 15 மற்றும் 16.05.19 நினைவிருக்கின்றதா ஐயா?

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2009-ஆம் ஆண்டு, இதே நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கின்றதா ஐயா?

ரத்தமும்-சதையுமான பிணங்களாக ஒரு இனமே துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வலிகள் நினைவிருக்கின்றதா ஐயா? மற்ற எல்லோரையும் விட தங்களுக்குத்தான் அதிகம் நினைவிருக்க வேண்டும்!

அடுத்தடுத்த நாட்களில், சடசடவென 60,000 ஆயிரத்திற்கும் மேலான பிணங்கள் முள்ளி வாய்க் கால் பகுதியில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. தங்கள் கலைஞரின் அரை மணி நேர உண்ணாவிரதப் போராட்டம், ‘போர் நிறுத்தம்’ செய்து விட்டது என நாடகமாடிய பின்னும், தடைச் செய்யப்பட்ட கனரக ஆயுத, நச்சுக் குண்டுகளை வீசி கொன்றுக் கொண்டிருந்தது சிங்கள அரசு.

களத்தில் இருந்து, ’24 மணி நேர போர் நிறுத்தமாவது அறிவிக்கச் சொல்லுங்கள்.” என்று புலிகளின் தளபதி, சூசை உள்ளிட்ட சிலர் உங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அதுகூட எனக்கு நேரடியாகப் பழக்கமில்லை, அண்ணன் கொளத்தூர மணி அவர்கள் மூலகமாகத்தான் என் தொடர்புக்கு வந்தார்கள் என கூறினீர்கள்.

புலிகளின் அந்தக் கோரிக்கையை நீங்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழி மற்றும் அருட்தந்தை ஜகத் கஸ்பர் ஆகியோரிடம் கூறினீர்கள். அவர்கள் டெல்லியில் உள்ள யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, நிபந்தனையின்றி சரணடை கின்றோம்’ என்பதாக அருட் தந்தை ஜகத்கஸ்பர் ஒரு வரைவை எழுதி, அங்கே அனுப்பிக் கொண்டிருந்தார்.

தளபதி பா.நடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் அவர்களின் தொடர்பிலும், ‘சரணைவடைது குறித்து அறிக்கையை எழுதும் ஆலோசனை’ கேட்டிருந்தார்.

இறுதியாக, ’ஆயுதத்தை மௌனிக்கின்றோம். அமைதி பேச்சுவார்த்தை நடந்த, காயம்பட்ட போராளிகளை மீட்க 24 மணி நேர போர் நிறுத்தம் வேண்டும்’ என்றளவில் எழுதுகிறது புலிகளின் தரப்பு.

நீங்களும்கூட பின்னாளில் ஒரு பேட்டியின் போது, “மே.15 அன்று அதிகாலை 140.மணிக்கு எல்லாத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டது. ஏறத்தாழ பனிரண்டேகால் மணி அளவில் என்னிடம் பேசிய ஒரு போராளி சொன்ன வார்த்தை, இப்போதும் என் நெஞ்சைப் பிழிகிறது. அவர் சொன்னார், ‘ஒரு வேளை இது எங்களின் கடைசி அழைப்பாகக்கூட இருக்கும்’ என்று. அதன் பிறகு எங்களுக்குள் நடந்த உரையாடல் எல்லாம் அதிகாலை 1.40 மணிக்கு முடிந்து விட்டது” என வேதனையோடு கூறியிருந்தீர்கள். நினைவில் உள்ளதா ஐயா. இப்போது நினைவிருக்காது.

தொடர்ந்து பேசிய தாங்கள்.. “அவர்கள் கேட்டது 24 மணி நேர போர் நிறுத்தம் ஒன்றுதான். நாங்கள் எங்களது ஆயுதப் போராட்டத்தை முற்றும் முழுதுமாக நிறுத்தி விட்டோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. எனவே வெறும் அமைதி உடன்பாடு பற்றி பேசுவதற்கு 24 மணி நேர போர் நிறுத்தம் என்ற கோரிக்கை மட்டும்தான் அவர்கள் கேட்டது. அதுதான் சூசையிடம் இருந்து வந்த கோரிக்கை. அதைத்தான் நாம் #மத்திய அரசு வரைக்கும் எடுத்துச் சென்று, அவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.

அந்த முயற்சிகைளை வெளிநாட்டில் இருந்து கே.பி. தொடர்வார் என்றுதான் களத்திலிருந்து சொன்னார்கள். நான் காத்திருந்தேன். நள்ளிரவு 12 மணியைத் தாண்டியும் அவர்களிடமிருந்து, வெளிநாட்டிலிருந்து தொலைபேசி ஏதும் வரவில்லை. பனிரெண்டேகால் மணிக்கு ஒரு தொலைபேசி வந்தபோது, அவர்தான் அழைக்கிறார் என்று நினைத்து நான் தொலை பேசியை எடுத்தேன்.

மறு முனையில் கனிமொழி பேசினார். ‘என்ன, இன்னும் எந்தத் தகவலும் வரவில்லையா’ என்று கேட்டார்கள். காத்திருக்கின்றேன், அதுவும் இவ்வளவு நேரத்திற்குப் பிறகு உங்களை எப்படி அழைப்பது என்ற தயக்கத்தில் நான் அழைக்கவில்லை என்று சொன்னபோது, ’நீங்கள் எதுவும் யோசிக்க வேண்டாம். ஈழத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம், கூப்பிடலாம்’ என்று சென்னார். நான் மறுபடி தொலைபேசி வந்தால் சொல்கிறேன் என்றேன்.

அதன் பிறகு இரவு 12.40. மணிக்கு ஏறத்தாழ நான் முதலிலே சொன்ன அந்த செய்திகள் வந்தன. அப்போதும் கே.பி.அவர்கள் பேச முடியவில்லை. அவர் எங்கே இருக்கின்றார் எனத் தெரிய வில்லை. மே 17,18-க்குப் பிறகுதான் ஒரு முறை கே.பி. என்னோடு பேசினார். அதற்கு முன்பு வேறொரு நபரிடம் இருந்து தகவல் வந்தன. நாங்கள் அந்த தகவல்களை எல்லாம் பரிமாறினோம்.

ஏறத்தாழ, பின்னிரவு 1.40 மணிக்கு, என்ன மனநிலையோடு நான் படுக்கச் செல்கிறேன் என்றால், ‘கிட்டத்தட்ட சாதகமான நிலை வந்துவிடும்’ என்ற மன நிலையோடுதான் நான் படுக்கைக்குப் போனேன்.

ஆனாலும், மே 16-ம் தேதி அதிகாலையில் முதலமைச்சரிடம் (கலைஞர்), நடந்தவைகளை எல்லாம் நாம் சொல்ல வேண்டும் என்று அவரது வீட்டிற்கு எவ்வித நேர்காணல் ஒப்புதலும் இல்லாமல் போனேன். நான் சென்னையில் பாம்குரோவ் ஓட்டல் இருக்கிறதே, அந்த இடத்தில் செல்லும் போது எனக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு தகவல் வந்தது.

‘அதிகாலை வெள்ளைக் கொடியுடன் போன நடேசனும் மற்றவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்’ என்ற தகவல். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

சார்லஸ் ஆண்டனியும் இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அப்போதுதான் வந்தது. நான் நேரடியாக முதலமைச்சர் வீட்டிற்குப் போனேன். உடனே என்னை மேலே அழைத்தார்கள். அவர் தயாராகக்கூட இல்லை. கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தார்.

நான் எனக்கு வந்த அந்தச் செய்திகளைச் சொன்ன போது, அவர், ‘எனக்கும் அந்த செய்திகள் வந்திருக்கின்றன’ என்று சொன்னார். என்ன செய்யலாம் எனப் புரியாத குழப்பத்தில் நடந்த வைகளை எல்லாம் அவரிடத்தில் சொல்லிவிட்டு வந்தேன். உண்மையைச் சொன்னால் அன்றைக்கு மிகுந்த கவலையோடு, கலக்கத்தோடுதான் அமர்ந்து அந்த செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். இவைகளை எல்லாம் நான் இதுவரை பதிவு செய்யவில்லை. முதன் முறையாக இப்போது இதை பதிவு செய்கின்றேன்”- என பேசியிருந்தீர்கள்.

இவற்றைச் சுட்டிக்காட்ட காரணம் உள்ளது. இது, தழிழினம்- ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட நாள். இனப்படுகொலையின் #பத்தாம் ஆண்டு நினைவு நாள். அதை நினைத்து, தாங்கள், எரியும் நெஞ்சோடு கனத்துப்போய் இருப்பீர்கள்.

அறிவும் மான உணர்ச்சியும் உள்ள தாங்கள் துரோகத்தைப் பற்றி ஏதேனும் பதிவிட்டிருப்பீர்கள் என்றுதான், தங்களின் முகநூல் பக்கம் வந்தேன்.

ஆனால் தாங்களோ, இந்த இன அழிப்பு நாளில் யாரும் காங்.கட்சியின் துரோகத்தைப் பற்றி பேசிவிடக்கூடாது என்று திட்டமிட்டு, சீமான் பற்றிய பதிவைப் போட்டு எல்லோரையும் ‘மடை மாற்றம்’ செய்துகொண்டுள்ளீர்கள். இன்னும் எத்தனைக் காலம்தான் இந்த ‘மடைமாற்ற’ வேலையில் நிற்பீர்கள்? எனத் தெரியவில்லை.!

இந்த இனத் துரோகத்தைத் திமுக-காங்.கட்சிதான் செய்தது என்று நான் கூறவில்லை ஐயா. மதிப்பிற்குரிய திரு. வைகோ அவர்கள்தான் கூறினார். பச்சைப் படுகொலையை, இனத் துரோகத்தைச் செய்தது திமுக-வும் காங்கிரஸும்தான் என்றார். இறந்துபோன புலிகளின் ஆவி, பொது மக்களின் ஆவி அவர்களை மன்னிக்காது என்று குற்றம் சாட்டினார்.

பிறகு வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுகவும் காங்.கட்சியும் பிரிந்து நின்ற சமயத்தில், காங்கிரஸ் கட்சியை எவ்வளவோ நம்பினோம். போர் நிறுத்தம் செய்வதாய் நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள் என்று திமுக தரப்பு குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார்கள். டெல்லியில் தொடர்பெடுத்துப் பேசிய காங்கிரஸ் புள்ளி யார் என்றும் பேசினார்கள்.

அதையெல்லாம் கூறி ஒரு பதிவு எழுதியிருப்பீர்கள். குமுறியிருப்பீர்கள், துரோகத்தையும் துரோகி களையும் சுட்டியிருப்பீர்கள். தளபதி பா.நடேசன் உள்ளிட்ட போராளிகளின் மரணத்தைச் சொல்லி யிருப்பீர்கள் என்று பார்த்தால், உதவாத ஒரு விஷயத்திற்காக சீமானிடம் ‘சத்தியத்தின் பிள்ளை களா? என கேள்வி எழுப்பியுள்ளீர்கள். ஆக, ஒருபோதும் ‘தாங்கள்’ சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்கள்? மற்றவர்களைத்தான் கேட்பீர்கள். அப்படித்தானே ஐயா?

2010-ல் கொடுத்த ஒரு பேட்டியில் தாங்கள், ‘1987 செப்டம்பர் 26 #திலீபனின் நினைவு நாள். அன்றி லிருந்துதான் நான் பொது வாழ்க்கைக்கும், ஈழ ஆதரவு நிலைப்பாட்டையும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும் முழுமையாக இறங்கினேன். கடந்த 22 ஆண்டுகளில் ஒரு நாளும், ஒரு பொழுதும் அதில் நான் பின்வாங்கியதில்லை” என்று கூறியிருந்தீர்கள். 2009-க்குப் பிறகு பின் வாங்கிவிட்டீர்களா எனத் தெரியவில்லை.

மற்றொரு கேள்வி.

1990 முதல் 2006 ஆறு வரை, தாங்கள் பழ.நெடுமாறன் ஐயா அவர்களோடுதான் தமிழ்த்தேசிய தளத்தில் நின்றிருந்தீர்கள். கலைஞரையும்-திமுகவையும் சீமானைவிட அதிகம் விமர்சனம் செய்து வந்தீர்கள். பட்டென்று 2006-ல் பழ.நெடுமாறன் அவர்களை விட்டு விலகி வந்து, “திராவிட தமிழர் இயக்கப் பேரவையைத்’ தொடங்கினீர்கள்.

அந்தப் பிரிவுக்கு, “ இந்த பிரிவு, முழுக்க முழுக்க தமிழக அரசியலைச் சார்ந்தது. தமிழ்நாட்டிற்கு கலைஞர் தலைமையா? #ஜெயலலிதா தலைமையா என்பதில், நான் ‘கலைஞர் தலைமைதான்’ என முடிவெடுத்து வெளியேறினேன் என்று கூறியிருந்தீர்கள். அதாவது பார்ப்பனத் தலைமை வேண்டாம், சூத்திரன் தலைமைதான் வேண்டும் என்று..

இப்போது, நானும் பார்ப்பனர்தான்’ என்று பூநூலை வெளியே எடுத்துக் காட்டிய ராகுல் காந்தி தலைமையிலான காங்.கட்சியை ஏற்கிறீர்களா? நிராகரிக்கிறீர்களா ஐயா?

அடுத்து கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கான பல போராட்டங்களில் கலந்துகொண்டு, சிறை சென்று, இந்த மக்களோடு மக்களாக ‘நாம் தமிழர் கட்சி’ நிற்கிறது. மறுபுறம், இந்த தேர்தலுக் கென்றே திடீரென முளைத்து வந்து நிற்கிறது ‘மக்கள் நீதி மைய்யம்’ கட்சி.

ஒன்று பார்ப்பனர் தலைமையிலான கட்சி. மற்றொன்று சூத்திரன் தலைமையிலான கட்சி. இப்போது தாங்களும் தங்களைச் சார்ந்த திராவிட கட்சிகளும், இந்த இருவரில் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்?

அன்று,பார்ப்பன தலைமை ஜெயலலிதாவா? சூத்திரன் தலைமை கலைஞரா என்று முடிவெடுத்து, கலைஞர் பக்கம் நின்றதைப்போல், இப்போது யாரை ஆதரிக்கப்போகிறீர்கள்? பார்ப்பனரையா? சூத்திரனையா? யார் உங்கள் எதிரி. தாங்கள் ‘சத்தியத்தின் பிள்ளை என்றால் பதில்’ அளிக்கலாம்.

இவ்வளவும் எழுதக் காரணம் இருந்தது ஐயா. அன்று நம்பிக்கைத் துரோகம் செய்து இனப் படுகொலை செய்த தலைமைகளுடன் தாங்களும் ஒருவராக இருந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தீர்கள். அந்த ஆதங்கத்தை, துரோகத்தை இந்த பத்தாம் ஆண்டு நினைவு நாளில் என்னவாக பதிவு செய்திருப்பீர்கள் என பார்க்க வந்து ஏமாற்றமடைந்ததுதான் இந்த பதிவு.

ஒன்றை நினைவுறுத்துகின்றேன் ஐயா.

இந்த இனப்படுகொலை குறித்து பழ. நெடுமாறன் 2009-ல் என்ன பேசினாரோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார்.

பெ.மணியரசன் 2009-ல் என்ன பேசினாரோ அதையேதான் இன்றும் பேசி வருகிறார்.

தோழர் தியாகு 2009-ல் என்ன பேசி பேசினாரோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார்.

தோழர்கள் இயக்குனர் களஞ்சியம், வ.கௌதமன் உள்ளிட்ட பல தோழர்கள் அப்போது என்ன பேசினார்களோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார்.

அதே போன்று 2009-ல் ஆரம்பித்து, 2010-ம் ஆண்டு தன் கட்சியைத் தொடங்கியபோது, நாம் தமிழர் கட்சியும்- சீமானும் என்ன பேசினார்களோ, அதே குற்றச்சாட்டைத்தான் இன்றளவும் மாறாமல் பேசி வருகிறார்கள்.

தங்களைப் போன்று, தங்களுடன் இருப்பவர்களைப் போன்று, முந்தாநாள் ஒரு பேச்சு, நேற்று ஒரு பேச்சு, என இருந்து விட்டு, இன்று “எல்லாமும் மறந்து போச்சு’ என மடைமாற்ற பதிவுக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கவில்லை.

விரும்பினால் பேசுவதற்கும், விருப்பமில்லை என்றால் போய் படுத்துக்கொள்வதற்கும் ஈழ இனப்படுகொலை ஒன்றும் சினிமா காட்சிகள் அல்ல.

அது ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்ட துரோக வரலாற்றின் பதிவு.

எந்த மனிதனையும்- சம்பவத்தையும். வரலாற்றையும் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்க, ‘அறம்’ அனுமதிக்காது. ‘அறம்’ தோற்றது போலவும், அதனை நசுக்குவோர் வெற்றி பெறுவது போலவும் மாயத் தோற்றம் உருவாகும். ஆனால் இறுதியில் ‘அரசியல் பிழைத்தோர்க்கு ‘அறம்’ கூற்றாகும்’!

பா. ஏகலைவன்

error: Content is protected !!