ஓலா கேப்ஸ்-ஸூக்கு 6 மாதம் தடை! – கர்நாடகா அரசு அதிரடி!

ஓலா கேப்ஸ்-ஸூக்கு 6 மாதம் தடை! – கர்நாடகா அரசு அதிரடி!

ஒட்டு மொத்த இந்தியாவில் போக்குவரத்து நெரிசலில் அதிகம் சிரமப்படும் மோசமான நகரம் எதுவென்றால் அது – பெங்களூர்தான். இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாகனம் சராசரியாக 9.5 கி.மீ தூரத்தை மட்டுமே கடக்க முடியும். டிராபிக் ஜாம் காரணமாக, பஸ், கார்களில் பயணிப்போரை விட, பைக்கில் செல்வோருக்கு பாதிப்பு குறைவுதான். சந்து, பொந்துகளில் புகுந்து செல்ல பைக்குகளால் முடியும். எனவே பைக்குகள் நகர்ந்தபடியே இருக்கும் என்பதால் அங்கு நாட்டிலேயே முதன் முறை என்ற அடைமொழியுடன் கடந்த 2016ல், கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை, பெங்களூரில், உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் அறிமுகம் செய்து அமர்களமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ‘பைக் டாக்ஸி’க்கள் சேவையை நடத்தியதையடுத்து கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.

ஓலா கேப்ஸ் (Ola Cabs) என்பது வாடகை கார் சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து மேலும் தனது சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஓலா கேப்ஸ் நிறுவனம், போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று கர்நாடக போக்குவரத்து துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசுப் போக்குவரத்துத் துறை மார்ச் 18ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ஆனி டெக்னாலஜிஸ், ஓலா பெங்களூரு நிறுவனத்துக்கு அளித்த உரிமம் 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் நகல் கையில் கிடைத்த 3 நாட்களுக்குள் ஓலா தனது உரிமத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

“மொபைல் ஆப் அடிப்படையிலான கார் சேவைகளை நடத்தவே ஓலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓலா நிறுவனத்துக்கு அளித்த நோட்டீஸ்களுக்கு அவர்கள் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. ஆகவே விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று போக்குவரத்து ஆணையர் வி.பி. இக்கெரி தெரிவித்தார். இதனையடுத்து 260 இருசக்கர வாகனங்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டன.

மேலும், உத்தரவை மீறி ஓலா டாக்ஸிக்கள் பெங்களூருவில் ஓடினால் நடவடிக்கை மேற்கொள்ள ஆர்டிஓ-வுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் திங்களன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் வெள்ளிக்கிழமையான இன்று வரை ஓலா அங்கு ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

error: Content is protected !!