முதல்வர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியிடம் அளித்த அறிக்கை முழு விபரம்!

முதல்வர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியிடம் அளித்த அறிக்கை  முழு விபரம்!

வர்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டது. இந்த அறிக்கையுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர். இன்று மாலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை அவரிடம் கொடுத்தார். முதல்வரின் கோரிக்கை மனுவுடன் சேத மதிப்பீடுகள், நிவாரணத்துக்கான செலவு மதிப்பீடுகள் ஆகிய விவரங்களைக் கொண்ட 141 பக்க அறிக்கையை இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ops dec 19

இதன் படி தமிழகத்தின் வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிவாரணத்துக்காக சுமார் ரூ.22,573 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.காவிரியில் தமிழகத்துக்கு வரும் தண்ணீரை குறைக்கும் வகையில், மேகதாது அணை உள்பட புதிய அமைப்புகளை கர்நாடகா அரசு உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடுமையான வகையில், கர்நாடகத்துக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்கொள்ளளவை 152 அடியாக உயர்த்த, அனுமதி வழங்க பாரதப் பிரதமர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம். அதனால், மத்திய அரசு இத்திட்டத்தை அமல் படுத்துவதற்கென சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இந்திய பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “வர்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.22,573 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில், முதல்கட்டமாக ரூ.1000 கோடி வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.

32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை, மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார். அவர் ஆற்றிய சேவையால் உலக அளவில் அவரது பெயர் தனி முத்திரை பதித்திருக்கிறது. அதனை நினைவு கூறும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா மற்றும் சிலை வைப்பது தொடர்பாக ஆவன செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!