செவிலியர்கள் போராட்டம் வாபஸ்! – AanthaiReporter.Com

செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

கடந்த 27ம் தேதியில் இருந்து   டி.எம்.எஸ் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைக்காக உள்ளிருப்புப் போராட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டு வந்தனர். அதாவது  மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் ( Medical Recruitment Board) மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11,000 செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ,தரவரிசை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பணிநியமனம் செய்யும் பொழுதே நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது.

அப்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.· உடனடியாக காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செவிலியர்களை பணிநியமனம் செய்யும் பொழுதே நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

ஒப்பந்த முறை,தற்காலிக முறை, வெளிக்கொணர்தல் முறையில் செவிலியர்களை பணிநியமனம் செய்யக்கூடாது. எட்டு மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் வந்த பொது நலவழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக போராட்டத்தை வாபஸ் வாங்கி பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது. போராட்டத்துக்கு தடை விதித்து வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக ஒத்திவைத்தது.

இதையடுத்து டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.