குஜராத் ; ராஜ்ய சபா தேர்தலில் நோட்டா அறிமுகம்!

குஜராத் ; ராஜ்ய சபா தேர்தலில் நோட்டா அறிமுகம்!

பாஜக வின் பலம் கொஞ்சூண்டு குறைந்து கஆணப்படும் ராஜ்யசபாவுக்கு குஜராத்தில் 3பேரை தேர்ந்து எடுக்க வருகிற 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க தரப்பில் அதன் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் மற்றும் காங். தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 3 இடத்துக்கு 4பேர் களத்தில் உள்ளதால் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்காக காங். எம்.எல்.ஏ.க்களை பா.ஜ. விலை பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 6 எம்.எல்.ஏ.க்கள் விலகி பா.ஜ.வில் சேர்ந்துள்ள நிலையில் மற்ற காங். எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ.15கோடி வரை பேரம்பேசப்பட்டதாக காங். குற்றம்சாட்டி வருகிறது. பா.ஜ. அச்சுறுத்தலுக்காகவே 44 காங்.எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு ரிசார்ட்சில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நோட்டா (யாருக்கும் வாக்கு இல்லை) முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கு காங். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் இது பற்றி காங். நேற்று பிரச்னை கிளப்பியது. மதியம் சபை கூடியதும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங். துணைத்தலைவர் ஆனந்த்சர்மா இதை கிளப்பினார். அரசியலமைப்பு சட்டத்திலோ அல்லது தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்ட மக்கள் பிரநிதித்துவ சட்டத்திலோ எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமலேயே குஜராத் ராஜ்யசபா தேர்தலில் ‘ நோட்டா’ இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலை சீர்குலைக்கும் செயல் ஆகும். அரசியல் சட்டம் திருத்தப்படவே இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும் திருத்தம் செய்யப்படாமல் அப்படியே தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி நோட்டா கொண்டு வர முடியும். அவை மூலம் காலியிடங்கள் காலியிடங்களை இந்த அவை தான் அறிவிக்கிறது. இதற்கிடையில் எப்படி புதிய ஷரத்துக்கள் அறிமுகப்படுத்த முடியும்… என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இது பற்றி தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்… இப்போது கேள்வி நேரத்தை நடத்துவோம் என்று அவைத்தலைவர் அன்சாரி கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பினர். அப்போது அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டு, சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்பின்படியே நோட்டா இடம் பெற்று இருப்பதாக அறிகிறேன். இந்த ஆட்சி வரும் முன்பே அந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு ஏற்ப, அரசியல்சட்டம் 324வது பிரிவின் கீழ் தேர்தல் கமிஷன் சில அறிவிக்கை வெளியிட்டுள்ளன. அந்த பிரிவின் கீழான அறிவிப்புகள் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும். நோட்டா இடம் பெற்றதில் ஏதேனும் மனக்குறை இருந்தால் அதற்காக கேள்வி நேரத்தை முடக்குவதா.. தேர்தல் ஆணையத்தின் முடிவை கோர்ட்டுகள் தள்ளுபடி செய்ய முடியும்” என்றார்.

அப்படியானால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் பொருந்தும். ஜனாதிபதி தேர்தலில் நோட்டா கொண்டு வந்திருக்கவேண்டும் என்று ஆனந்த்சர்மா வலியுறுத்தினார். இது ராஜ்யசபா சம்பந்தப்பட்டது என்பதால் இது பற்றி கவனத்தில் கொள்ளப்படும். இப்போது கேள்வி நேரம் நடக்கட்டும் என்ற தொடர்ந்து அன்சாரி கூறினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசாத் எழுந்து, இது மிகவும் முக்கியமான பிரச்னை. குஜராத்துக்கு என்று தனியாக அரசியல் சட்டம் உள்ளதா.. என்று கேள்வி விடுத்தார். தொடர்ந்து காங். உறுப்பினர்கள் அமளியால்சபை10 நிமிடம் அன்சாரி ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடியபோதும் பிரச்னை கிளம்பியதால் சபை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் அதிகாரி ஒருவர் இது குறித்து, ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா இடம் பெற வேண்டும் என்று கடந்த 2014 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகு, ராஜ்யசபா தேர்தலிலும் நோட்டா அமலுக்கு வந்தது. ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போடும் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டிடம் காண்பித்த பிறகே ஓட்டுப்பெட்டிக்குள் சீட்டை போட வேண்டும்” என்றும் விளக்கம் அளித்தார்.

Related Posts

error: Content is protected !!