காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதா? நோ சான்ஸ்! – கர்நாடகா முதல்வர் அறிவிப்பு – AanthaiReporter.Com

காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதா? நோ சான்ஸ்! – கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

காவிரியில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூருவில் மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சித்தராமையா இதனை தெரிவித்தார். பெங்களூருவில் மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சித்தராமையா இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பால் கர்நாடக விவசாயிகள் அரசின் மீது நம்பிக்கை இழக்க கூடாது. கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

cauvery sep 5a

காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு அடுத்த 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசிற்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரய்யா மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்தினர்.

பின்னர், முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் இன்னும் கர்நாடக அரசிற்கு வந்து சேரவில்லை. இன்று அல்லது நாளை காலை தீர்ப்பு நகல் கைக்கு கிடைக்கும்.தீர்ப்பு நகல் கிடைத்ததும் கர்நாடக சட்ட வல்லுனர்களுடன் அடுத்த கட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்து அரசு ஆலோசிக்கும்.

காவிரி நீர்திறப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபை, சட்டமேலவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் பாசனப் பகுதி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கோர்ட் கர்நாடகாவிற்கு எதிராக தீர்ப்பளிக்கும் போது பதட்டமான சூழல் நிலவுவது வழக்கம். கர்நாடக விவசாயிகள் அரசின் மீது நம்பிக்கை இழக்க கூடாது. கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும்.அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் காவிரி நீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து மாண்டியா மாவட்ட விவசாயிகள் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு கர்நாடக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கர்நாடக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.