ட்ரம்ப் – கிம் ஜோங் உன் உச்சி மாநாடு ரத்து – வெள்ளை மாளிகை அறிவிப்பு – AanthaiReporter.Com

ட்ரம்ப் – கிம் ஜோங் உன் உச்சி மாநாடு ரத்து – வெள்ளை மாளிகை அறிவிப்பு

சர்வதேச அளவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடனான உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வடகொரியா தன் அணு ஆயுத சோதனை தளத்தை இடித்து தரைமட்டமாக்கிய சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் காரணமாக கடந்த ஆண்டு கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை தடுக்க அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும்படி சீனாவிடம் வலியுறுத்தியது.

அதன் பலனாக வடகொரியா சமீபத்தில் தன் ஆணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக அறிவித்தது. அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வந்தது.

அதை தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா, வடகொரியா இடையே மீண்டும் பிரச்சனை எழுந்தது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்தால் பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என வட கொரியா தெரிவித்தது. அதனால் அடுத்த மாதம் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பது சந்தேகம் என அதிபர் ட்ரம்ப் கூறினார். அதை தொடர்ந்து வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது.

வடகொரியா அதிபருக்கு டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல. சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது’’ என்றும் “நீங்கள் அணு ஆயுதத் திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடைய அணு ஆயுதங்கள் மிகப்பெரியது, சக்தி வாய்ந்தது அதனை நாங்கள் ஒரு போதும் பயன்படுத்தாதிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்

அத்துடன்‘‘வடகொரியாவின் வெளிப்படையான விரோதத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். உங்களை சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்’’ எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.