செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By பெருமாள் ஆச்சி – AanthaiReporter.Com

செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By பெருமாள் ஆச்சி

நவம்பர் 8, 2016 இரவு நம் பாரதப்பிரதமர் போகி கொண்டாடிய நாள்..சாமானிய மக்களின் மகிழ்ச்சிக்குப்பொங்கல் வைத்த நாள்.500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது என்னவோ குழப்பமாகத்தான் இருந்தது. என்ன விளைவுகள் ஏற்படும்? இதனால் நன்மையா? தீமை யான்னு ஒன்னும் புரியல. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையெனவே நம்பவும்பட்டது. ஆனால் அடுத்தடுத்த அலைக்கழிப்புகள், அறிவிப்புகள், பலர் தலையில் இடியென இறங்கி, பல மாதங்கள் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்ததென்னவோ உண்மை..

பல குடும்பங்களில் பெண்களின் இரகசிய சேமிப்புகள் அம்பலமாகியது. இன்னும் சொல்லப்  போனால் பெண்கள், குழந்தைகளின் சேமிப்புகளில் இருந்த 50, 100 சில்லறைகள்தான் சில குடும்பங்களின் தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்தது. ஐயோ என்ன செய்வேன்? என்று கட்டுக்கட்டுக்கட்டாய் வைத்திருந்தவர்களை அரற்ற வைத்த கருப்பு தினங்கள் அவை. ஆனால் அதிலும் சில பணமுதலைகள் தங்கள் கையிருப்புகளை மாற்ற கையாண்ட வழிமுறைகள் ஏராளம். அவர்களுக்காக வங்கிகளின் வாசலில் கூலிக்கு நின்று மாற்றியவர்களும் உண்டு. சிலர் சில வங்கி அதிகாரிகளின் உதவியோடு கட்டுக்கட்டுக்கட்டாய் கைமாற்றிக் கொண்டதும் செவிவழிச்செய்தி யானது.

வங்கிக்கணக்கும், பண அட்டையும் (ATM) இல்லாத மக்களை கலங்க வைத்தது. பணமற்ற டிஜிட்டல் பரிமாற்ற வர்த்தகம் பற்றி விளங்காத மக்கள் நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது போல அரண்டனர். குப்பையில் எறிவதும், தீ வைப்பதுமாய் சிலர் தங்களிடமிருந்த அளவற்ற பணத்தை அழிக்க முற்பட்டனர். முந்தைய நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக ரொக்கமாய் பணம் வைத்திருந்தவர்கள் செய்தவறியாது கலங்கினா். 6000 ரூபாய் பணமாய் வீட்டில் வைத்திருந்த எனக்கே எப்பொழுது அதை மாற்றுவது என்ற கவலை இருந்தது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் டிஜிட்டல் வர்த்தகம் ஓரளவு கை கொடுத்தது. கிராமங்களில் இருந்தவர்கள் நிலைமை துயரங்கள் நிறைந்ததாகவே மாறியிருந்தது. வங்கிகள், ATM கள் இல்லாத அல்லது குறைவாக இருந்த கிராமங்களில் மின்னணு பரிமாற்ற வசதியுமின்றி அவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

புதிய 2000 ரூபாய் நோட்டும் எளிதில் பெற முடியாததாகவும், மாற்ற முடியாததாகவும் மக்கள் பட்ட துயரங்கள் சொல்லில் வடிக்கமுடியாது.கருப்புப்பணம் ஒழிப்பு என்று அறிவிக்கப்பட்டதில் எந்த பெரும் பணக்காரரும் வங்கியின் வாசலிலோ, ஏடிஎம் வாசலிலோ நின்றதாகத் தெரியவில்லை. கறுப்புப்பணம் ஒழிந்ததா என்ற கேள்விக்கு இன்று வரை சரியான, தெளிவான விளக்கமுமில்லை. அந்த அறிவிப்பின் வலிகளை உணர்ந்தவர்கள் இன்றும், நம் பிரதமர் ஏதேனும் அறிவிக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் அச்சத்துடனே பார்க்கின்றனர் மக்கள்.

பெருமாள் ஆச்சி