ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு சொன்னதாலே யாரும் உயிரிழக்க்லையே! – பிரதமர் தரப்பு தகவல்!

ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு சொன்னதாலே யாரும் உயிரிழக்க்லையே! – பிரதமர் தரப்பு தகவல்!

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனக் கூறப்பட்ட பண மதிப்பிழப்பின் விளைவாக யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற் காகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஏ.டி.எம். வாசல்களில் கால்கடுக்க மக்கள் காத்திருந்தார்கள். பலர் பணிபுரியும் நிறுவனங்களில் விடுமுறை எடுத்து அடிப்படை தேவைகளுக்காக பணத்தை பெற வங்கிகளிலும், ஏ.டி.எம்.மிலும் காத்திருந்தனர். கூலித்தொழிலாளி அரிசி வாங்கக்கூட வங்கியைத் தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு கூட பணம் பெற ஏ.டி.எம்.க்கு செல்லும் நிலை இருந்தது. இந்த அறிவிப்பின் தாக்கமும், பணத்தை மாற்ற முடியாத ஏக்கமும் கிட்டதட்ட 100 பேரைக் கொன்றதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என தற்போது பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்த மனுவில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கேட்டிருந்தார். இந்த மனுவுக்கு 30 நாள்கள் ஆகியும் பதில் கிடைக்க வில்லை. அதனால், சர்மா மத்திய தகவல் ஆணையத்திடம் இது குறித்து மனு தாக்கல் செய்தார். தகவலை அளிக்காத பிரதமர் அலுவலக அதிகாரிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியது மத்திய தகவல் ஆணையம். விசாரணையின்போது ஆஜரான பிரதமர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி, தகவலை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டார். “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2(f) ன் வரையறைக்குள் சர்மா கேட்ட கேள்வி வரவில்லை. அதனால், அவருக்குத் தகவல் வழங்கப்படவில்லை” என்றார். பின்னர், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என தெரிவித்தார்.

அதே சமயம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மூன்று ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் உயிரிழந்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!