நீட் வினாத்தாள் குளறுபடி; கருணை மதிப்பெண் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட் – AanthaiReporter.Com

நீட் வினாத்தாள் குளறுபடி; கருணை மதிப்பெண் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

தமிழில் நீட் தேர்வு எழுதிய போது வினாத்தாள் மொழிப் பெயர்ப்பில் குளறுபடி பிரச்னை இருந்தி ருந்தாலும் இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு “ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர்.

ஆனால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.ஏ, பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், ஆங்கிலம் தெரியவில்லை என்றால் மாணவர்கள் எப்படி மருத்துவம் படிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ‘மருத்துவப் படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், நீட் தேர்வை மட்டும் பிற மாநில மொழிகளில் நடத்துவது ஏன்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கமளித்த சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலேயே நீட் தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர்.

சிபிஎஸ்இ தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.