இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை..ஏன்? – சிவகார்த்திகேயன் தகவல் – AanthaiReporter.Com

இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை..ஏன்? – சிவகார்த்திகேயன் தகவல்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் 15-வது படம் இதுவாகும். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

தனி ஒருவன்’ வெளியீட்டுக்குப் பிறகு படத்தை இரண்டு முறை பார்த்து, மோகன் ராஜா சாரிடம் தொலைபேசியில் அழைத்து படத்தை பற்றி பெருமையாக பேசினேன். அவரோடு ஒரு படம் பண்ணனும்னு நானே அவரிடம் தயக்கத்தை விட்டு கேட்டேன். இதுவரை அவர் ரீமேக் படம் தான் செய்வார் என்று கிண்டல் பண்ணுகிறார்கள். ரீமேக் படம் பண்றது சாதாரண விஷயம் அல்ல. எனக்கும் கூட பத்து ரீமேக் பட வாய்ப்புகள் வந்தன. ரீமேக் படங்கள் செய்வது கடினம் என்பதால் மறுத்துவிட்டேன். வேலைக்காரன்’ என்பது தலைவர் ரஜினி சாருடைய தலைப்பு. அதை வைப்பதா என முதலில் யோசித்தேன். படத்துக்கு பொருத்தமான தலைப்புனு ராஜா சார் சொன்னதால் வைத்தோம். அவரிடம் ஒரு முறை தான் சரியா சார் என்று கேட்பேன். அதற்கு மேல் அவருடைய முடிவுக்கு விட்டுவிடுவேன். ஏனென்றால் இப்படம் முழுக்க ஜெயம் ராஜா சார் மீது நம்பிக்கை வைத்து செய்திருக்கும் படம். இப்படத்தின் மூலம் கிடைக்கும் பெருமை அனைத்துமே அவரைத்தான் சேரும்.

‘வேலைக்காரன்’ தலைப்பை கவிதாலயா நிறுவனத்திடமிருந்து வாங்கி தன் படத்துக்கு வைத்திருந்தார் விஜய் வசந்த். இந்த படத்துக்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார். ஃபகத் பாஸில் இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது.

‘ஏகன்’ பட படப்பிடிப்பில் தான் முதன் முதலில் நயன்தாராவை நான் பார்த்தேன். அதன் பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். அதன் பிறகு ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி இடத்தை உருவாக்கியிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. கேராவன் (caravan) உபயோகப்படுத்தாமல் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ராம்ஜி (ஒளிப்பதிவாளர்) மிகவும் கஷ்டமான படங்களையே தேர்ந்தெடுத்து தான் செய்பவர். முத்துராஜ் சாரின் (கலை இயக்குநர்) உழைப்பை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.

அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லை என்று ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய இசையில் ‘வேலைக்காரன்’ எனக்கு 5-வது ஆல்பம். அனிருத் அவருடைய இசையின் மூலம் எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கிறார் என்றால் அதை விட சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்.

எனக்கு கிடைத்திருக்கும் இடம், கார், வீடு அனைத்துமே மக்கள் கொடுத்தது தான். அவர்களுக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை. அப்படி ஏதாவது திருப்பிக் கொடுக்க முடியும் என்றால் அது இந்த ‘வேலைக்காரன்’ படமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தில் சில காட்சிகள் நடிக்கும்போது கண் கலங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு சில விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறேன். அதற்கு அந்தத் தருணத்தில் சந்தோஷப்பட்டேன். இப்போது சொல்கிறேன், இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை. ஏன் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது.

எனக்குள் இருக்கும் மனிதனிடம், இப்படம் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதன் மூலம் சிறிது மாறியிருக்கிறேன். 9 படம் சந்தோஷப்படுத்துவதற்காக நடித்தேன் என்றால் 1 படம் கருத்து சொல்லும் படமாக நடிப்பேன். கீழ்தட்டு மக்கள் இருக்கும் நிலை மாற வேண்டும் என நினைக்கிறோம். அவர்களுடைய கேள்விகள், வலிகள், தேவையான நியாயங்கள், ஆசைப்படும் விஷயங்கள் என அனைத்துமே கிடைக்ககிறதா, நடக்கிறதா என்பது தான் ‘வேலைக்காரன்’.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.