சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ! – AanthaiReporter.Com

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியது. இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ் நேர காண்காணிப்பு மையங்களின் ஆய்வில் சுவாசிக்க தகுந்த அளவான தரக்குறியீடு 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்று ஆலந்தூரில் 101, வேளச்சேரியில் 113, மணலி 182 என ஒவ்வொரு பகுதிகளிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. சென்னையில் 7வது நாளாக தொடர்ந்து காற்று அளவு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னையில் ஒட்டு மொத்தமாக காற்று மாசு என பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் 28 இடங்களில் காற்றின் மாசை அளவிடும் நிலையங்கள் உள்ளன என்றும், சென்னையில் மட்டும் 8 இடங்களில் காற்றின் தரத்தை அறியும் நிலையங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை கேட்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு சில இடங்களில் காற்று மாசு அடைந்ததற்கான காரணம் புல் புல் புயலின் தாக்கம் தான் என்றும் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார்.