இந்தாண்டு சமாளிச்சிடலாம் : நெக்ஸ்ட் இயர் இதை விட மோசமான தண்ணிர் பஞ்சம் வருமாம்! – AanthaiReporter.Com

இந்தாண்டு சமாளிச்சிடலாம் : நெக்ஸ்ட் இயர் இதை விட மோசமான தண்ணிர் பஞ்சம் வருமாம்!

நாம் வாழும் பூமியில் உள்ள நீரில் 1 சதவீதத்திற்குக்கும் குறைவாகவே குடிப்பதற்கே ஏற்றதாக உள்ளது. அதே சமயம் உலகம் முழுக்க ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 1 கேலன் (4 லிட்டர்) தண்ணீர் பயன்படுத்துகிறார்கள். அதனால் 2025 ஆம் ஆண்டளவில் நீர் பற்றாக் குறையால் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆப்பி ரிக்கா மற்றும் ஆசியாவில் பெண்கள் 3.7 மைல்கள் சென்று நீர் சேகரிக்கிறார்கள். இது இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கலாம். குடி நீர் தேவைகளுக்காக மட்டும் பாட்டிலில் அடைத்து உலகில் வருடத்திற்கு ரூ.4,37,490 கோடி முதல் ரூ.5,83,320 கோடி வரை விற்பனை செய்யப் படு கிறது என்ற தகவல்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியான நிலையில் நிதி ஆயோக் சர்வேப்படி வரும் 2020ம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு சென்னையில் கடும் வறட்சி நிலவும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆம்.. சென்னை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள 21 நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும். காரணம் கடந்த காலங்களில் இந்த 21 நகரங்களிலும் நிலத்தடி நீர் உயர்வதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நகரங்களில் வாழும் மக்களின் நீர்த்தேவையில் 40 சதவீதம் நிலத்தடி நீரை நம்பித்தான் உள்ளது. நீங்கள் எத்தனை முறை எவ்வளவு தரம் வாய்ந்த மோட்டரை ஆன் செய்தாலும் நிலத்தடி யில் நீர் இருந்தால்தானே அது மேலே வரும். இந்த நிலைமை நீடித்தால் இந்த நகரங்களில் வாழும் 600 மில்லியன் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது நிதி ஆயோக்.
மொத்த இந்தியாவும் சரியான பருவமழை இல்லாத காரணத்தால் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. இதில் மனிதர்கள் மட்டுமில்லை, கால்நடைகள், வன விலங்குகள், பறவைகள், பல வருட மரங்கள், செடிகள்,கொடிகள் என அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. ஆனால், அரசிடம் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதுதான் துயரம். இதுகுறித்து நம் ஊடகங்களும் பெரிய அளவில் எதையும் ரிப்போர்ட் செய்யவில்லை. தண்ணீர் பஞ்சத்தால் எத்தனை ஆடு, மாடு, கோழி, பன்றி என வீட்டு விலங்குகளும் பறவைகளும் மாய்ந்தன என்பதற்கு அத்துறை சார்ந்தவர் களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால் இவை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

நிதி ஆயோக் எச்சரித்த பின்பும் நமது மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் என்ன இருக்கின்றன என அரசிடம் கேள்வி கேட்க யாருமே தயாராக இல்லை என்பதுதான் சோகம்!